ஹைதராபாத்:இந்தியாவில் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் 33 ஆயிரம் பேர் மரணமடைகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கும் நிலையில், இது நாள் வரை நாம் மாசு குறைவான நகரங்கள் என நம்பிக் கொண்டிருப்பவை எல்லாம் உண்மையில் பாதுகாப்பானவை இல்லை என்கிறது லான்சட் பிளானட்டரி ஹெல்த் ஆய்வறிக்கை. WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் குறைவான தரநிலையை காற்று மாசுபாட்டிற்கான அளவுகோலாக இந்தியா நிர்ணயித்திருப்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய அரசு காற்று மாசுபாட்டிற்கான அளவுகோலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் முனைவர் பார்கவ் கிருஷ்ணா வலியுறுத்துகிறார். இனி அவரது உரையாடலைக் காணலாம்.
லான்சட் ஆய்வறிக்கை பற்றி எங்களுக்கு கூறுங்கள். இது இந்தியாவின் பல்வேறு மாநில வாரியாக காற்று மாசுபாடு பற்றியதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஆய்வு நடத்தப்படுவது இது தான் முதல் முறையா?
ஆம் நாடு முழுவதும் தரவுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆய்வுகளில் இதுவே முதன்முறை. இந்த ஆய்வை நடத்துவதற்கு எங்களுக்கு சுமார் 2 ஆண்டுகள் வரையிலும் தேவைப்பட்டது. குறைந்த காலத்தில் (Short term) காற்று மாசுபாட்டுக்கு உட்படுவது குறித்த தரவுகளை சேகரித்தோம். நாடு முழுவதும் 10 நகரங்களில் இந்த ஆய்வினை நாங்கள் நடத்தியிருக்கிறோம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆய்வு நடத்தப்பட்டதில்லை. இதுவரையிலும் காணாத வகையில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் காற்று மாசினால் எப்படி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நிறுவியுள்ளோம். இது நாள் வரையிலும் காற்று மாசு என்பது வட மாநிலங்கள் மட்டுமே தொடர்புடையது என்பது போன்ற கருத்தியல் நிலவி வந்த நிலையில், முதன் முறையாக தென்னிந்திய மாநிலங்ளும் காற்று மாசின் பாதிப்பை சந்திக்கின்றன என்றார்.
இந்த ஆய்வறிக்கையில் PM 2.5 என்ற சொற்றொடரை அடிக்கடி படிக்கிறோம். இது என்னவென்று விளக்க முடியுமா?
எளிமையாக விளக்குவதென்றால், எந்த ஒரு எரிபொருளை எரிக்கும் போதும் 2 விதமான மாசுபாடு ஏற்படுகிறது. இந்த எரிதல் என்ற செயல்பாட்டின் போது மிக நுண்ணிய துகள்கள் காற்றில் பரவுகின்றன. இது தவிர வாயு நிலையில், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களும் உருவாகின்றன. இதில் PM 2.5 என்பது காற்றில் பரவும் அந்த நுண்ணிய துகள்களைக் குறிக்கிறது இதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 2.5 மைக்ரானுக்கும் குறைவான அளவைக் கொண்ட பார்ட்டிக்கிள் மேட்டர் என்பதால் இதனை PM 2.5 என குறிப்பிடுகிறோம். இது ஏன் ஆபத்தானது என்றால் இது உங்களின் நுரையீரலுக்குள் எளிதாக பயணிக்கிறது. ஏன் ரத்தத்தில் கலந்து பயணித்தும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்கிறது. இந்த PM 2.5 துகள்கள் நச்சுத்தன்மையுடையவை என்பதால் உங்களின் உடல்நலனில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.
இத்தகைய நச்சுவாயுக்களிலிருந்து நம்மை நாம் எப்படி தற்காத்துக் கொள்வது?
கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வட இந்திய மாநிலங்கள் குறிப்பாக டெல்லியில் மாசு அதிகமாக இருந்த நேரங்களில் என்.95(N95) முகக்கவசங்களுடன் மக்கள் பயணித்தார்கள். இந்த முகக்கவசங்களை கோவிட் நேரத்தில் அனைவரும் பயன்படுத்தியதையும் நாம் பார்த்தோம். இவை காற்று மாசிலிருந்தும் நம்பை பாதுகாக்க நன்றாக வேலை செய்கின்றன.
உங்களின் ஆய்வறிக்கையின்படி உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் இந்தியாவின் காற்று மாசுக்கான குறியீடு அதிகமாக உள்ளது. இது ஏன் கவலைக்குரியது?
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று WHO எனும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை என்பது உலக அளவிலான ஆதாரங்களின் அடிப்படையிலானது. முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலான ஆவணங்களை இந்த அமைப்பு தனது உறுப்பு நாடுகளுக்கு வழங்கியுள்ளது. எனவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வழிகாட்டு அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின் படி, 15 மைக்ரோ கிராம் கியூபிக் மீட்டர், அதாவது சதுர மீட்டர் பரப்பில் 15 மைக்ரோ கிராம் அளவிற்கு மிகாமல் இந்த PM 2.5 துகள்களின் அளவு இருக்க வேண்டும். இதுவே ஆண்டு சராசரியாக 5 மைக்ரோ கிராம் தான் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு தற்போது இந்தியாவில் டெல்லியை எடுத்துக் கொண்டால், நமது ஆய்வறிக்கையின் படி, டெல்லியில் சராசரி காற்று மாசு அதாவது PM 2.5 அளவு 110 மைக்ரோ கிராமாக உள்ளது. எனவே நாம் சராசரி அளவைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் 20 மடங்கு அதிகமான காற்று மாசினை எதிர் கொள்கிறோம். நம்முடைய தேசிய காற்று மாசு தரக்குறியீடு கடைசியாக 2009ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர் நாம் இதனை மறு ஆய்வுக்கு உட்படுத்தவே இல்லை. இந்தியாவின் நிர்ணயப்படி 60 மைக்ரோ கிராம் அளவுக்கான PM 2.5 துகள்களின் அளவு பாதுகாப்பானது என சொல்கிறது. இந்த தர அளவைக் காட்டிலும் குறைவான இதே நேரம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் அதிகமான காற்று மாசு கொண்ட நகரங்களில் மரணங்கள் ஏற்பட்டுள்ளதை எங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளோம். எனவே இந்தியா நிர்ணயித்துள்ள தர அளவுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்கு போதுமானதாக இல்லை என்றார்