சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் ஐனவரி 5ம் தேதியுடன் நிறை பெற்றுள்ளது. இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில், தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் கற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜனவரி 05 உடன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, தனி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சி தேர்தல்: தனி அதிகாரிகள் குறித்து மசோதா தாக்கல் செய்யப்படுமா?
சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஒவ்வொரு ஊராட்சியிலுள்ள தீர்மானப்புத்தகம், பிற பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் (Bank Pass Book) ஆகியற்றை பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ள 26 காசோலைகளைக் (Uncashed Cheques) கணக்கிட்டு அக்காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும். ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தைத் திறம்பட செயல்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.