நாகர்கோவில்: சமையலில் தொடங்கி குளிப்பது, துவைப்பது, படிப்பது, விளையாடுவது, உண்ணுவது. உறங்குவது என மனிதனின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அச்சாரமாக நாட்டின் விஞ்ஞானத் துறை திகழ்ந்து வருகிறது.
இத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்தாலும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டு மக்கள் மத்தியில் தனிகவனம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு, சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எளிய பின்னணி கொண்ட நபர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாராயணன் இன்று தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாராயணனின் சொந்த கிராமமான மேலகாட்டுவிளையில் இன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
முன்னதாக, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:
கேள்வி: ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இஸ்ரோவின் தலைவராக உயர்ந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் தான் நான் படித்தேன். அதன் பிறகு டிப்ளமோ முடித்து இஸ்ரோவில் பணியில் சேர்ந்தேன். நேற்றுடன் இஸ்ரோவில் சேர்ந்து 41 ஆண்டுகள் பணி முடித்துள்ளேன். என்னைப் போன்ற பல விஞ்ஞானிகள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். எந்த ஊரில் இருந்து வந்தோம் என்பது முக்கியமில்லை; எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதும் முக்கியமில்லை. எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
ஒரு இளைஞன் வெற்றியடைய வேண்டுமென்றால் படிப்பு மட்டும் முக்கியமல்ல. அனைத்து வகையிலும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளத்தோடு வளர வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. உழைப்பும் வேண்டும்; நம் நாட்டு மக்களுக்கும், தேசத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பரந்த மனதோடு பணியாற்ற வேண்டும்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்ற குறளுக்கு ஏற்ப உள்ளத்தை பொறுத்து நமது வளர்ச்சி அமையும் என்பதை வலிமையாக பதிவு செய்கிறேன். மாணவர்கள் குறிக்கோளுடன் படிக்க வேண்டும். அனைத்து விதத்திலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சொந்த நாடு, சொந்த ஊர் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மையோடு படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.
1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண ஒரு நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, நம் தேசம் வளர்ச்சியடைந்த நாடாக மாற மாணவர்கள் சேவை செய்ய வேண்டும்.
கேள்வி: இஸ்ரோவில் வேலை வாய்ப்புகள் குறித்து சொல்லுங்கள்? அந்த வேலையை பெறுவதற்கு இளைஞர்கள் எப்படி தயாராக வேண்டும்?
பதில்: இஸ்ரோவில் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை. இஸ்ரோ சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. செயற்கைக்கோள் இஞ்சின் போன்றவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதுபோன்ற வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரோவில் நேரடியாக சேர்ந்தால் வரவேற்கத்தக்கது. இல்லாவிட்டாலும் வெளி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.
கேள்வி: இஸ்ரோவில் ஒரு நீண்ட நெடிய அனுபவம் பெற்றுள்ள நீங்கள் உங்களது பணியில் சாதனையாக எதை கருதுகிறீர்கள்?
பதில்: குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சாதனை என்று நான் சொல்ல முடியாது. இஸ்ரோவின் எந்தவொரு சாதனையும் தனிப்பட்ட நபரின் சாதனை கிடையாது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்துவரும் வெற்றி. இஸ்ரோவில் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரின் சாதனையாகவும் இஸ்ரோலின் சாதனைகளை பார்க்கிறேன்.
1962 இல் இருந்து இன்று வரை ஆறு விதமான ராக்கெட்டுகள் தொழிற்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம். 131 செயற்கைக்கோள்கள்களை, பல்வேறு தொழிற்நுட்பங்களுடன் பல்வேறு வகையில் தயார் செய்துள்ளோம். இவை அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றி என்று சொல்ல முடியாது. இஸ்ரோவின் 20,000 ஊழியர்களின் வெற்றியாகும்.
தினமும் ஒரு சவாலான பணியை மேற்கொண்டு வருகிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய வகை ராக்கெட்டை வடிவமைத்தோம். அன்று அது சாதனையாகத் தெரிந்தது. கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் ராக்கெட்டை ஏவ முயன்றபோது, அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட சின்ன சோதனையில் சின்ன தீப்பொறி வந்தாலே எங்களுக்கு அது சாதனையாக இருந்தது.
கேள்வி: கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை கற்றுதர மறுத்த வெளிநாடுகள் தற்போது நமது சாதனையை எப்படி பார்க்கிறார்கள்?
பதில்: கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் தொழிற்நுட்பம் இந்தியாவிற்கு வெளிநாடுகள் தர மறுத்த ஒரு திட்டமாகும் அதில் முக்கியமாக எரிப்பொருட்களாக பயன்படுத்தப்படும் திரவ நிலை கொண்ட ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனில் ராக்கெட்டின் இன்ஜின் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இத்தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் நமக்கு கற்றுதர மறுத்தபோது 1995 இல் கிரையோஜெனிக் திட்டத்தை ஆரம்பித்தோம். விஞ்ஞானிகளாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து இத்தொழில்நுட்பத்தை வளர்ச்சி அடைய செய்தோம். திருவனந்தபுரத்தில் அதற்கான வடிவமைப்பு பணிகள் (டிசைன் ஒர்க்) நடைபெற்றன. மகேந்திரகிரியில் தான் அதனை சோதனை செய்தோம்.
இந்தியாவின் மதிப்பு உயர்வு: வெளிநாடு கற்றுதர மறுத்த ஓர் உயர் தொழில்நுட்பத்தில் நாம் வெற்றி அடைந்தது மட்டுமின்றி, ராக்கெட் ஏவுதலில் கிரையோஜனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகத்தின் ஆறாவது நாடாக இந்தியா இன்று திகழ்கிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையான விஷயம். கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை உருவாக்கும் திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஆண்டவனின் அனுக்கிரகம்.
கேள்வி: உங்கள் சாதனைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய உங்களுக்கு திருப்தியை கொடுத்த திட்டங்கள் பற்றி?
பதில்: 'மார்க் 3' திட்டத்தில் திட்ட இயக்குனராக 7 ஆண்டுகள் பணி புரிந்தேன். அந்த திட்டம் திருப்திகரமாக இருந்தது. 'சந்திராயன் 2' வெற்றியடையாமல் போனபோது தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாங்கள் அனைவரும் சேர்ந்து 30 நாட்களில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை அளித்தோம். அதன் பிறகு அத்திட்டமும் வெற்றியடைந்தது.
ஒரு தோல்வி ஏற்பட்டாலும்கூட அதை நாங்கள் தோல்வியாக நினைக்கமாட்டோம். புதிய அனுபவமாக தான் பார்ப்போம். உங்களுக்கு திறமை இருந்தால் திறமைசாலிகள் உங்களை மதிப்பார்கள் என்பதைபோல, இன்றைக்கு எல்லா நாடுகளும் இந்தியாவை மதிக்கின்றன.
கேள்வி: இஸ்ரோவின் தலைமை பதவியை அலங்கரிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் நீங்கள்! இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இஸ்ரோவின் தலைவர் பதவியை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, கேரளா என்று பிரித்து பார்க்க வேண்டாம். இது இந்திய விண்வெளி திட்டம். பிரதமர் மோடியின் கீழ் உள்ள பெரிய திட்டம். எங்கள் அலுவலகத்தில் திறமைக்கு தான் மதிப்பு. எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல.
நான் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து படித்து வந்தவன். என்னை இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்றால் அது என் திறமைக்கான அங்கீகாரம் மட்டுமே.
கேள்வி: குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ மையத்தை அமைக்கும் பணிகள் என்ன நிலையில் உள்ளன?
பதில்: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் மையத்தை அமைக்கும் பணிகள் அனைத்து நடைபெர்று வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டில் அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் பாயும்.
நாராயணனை பற்றி: கன்னியாகுமரி மாவட்டம் மேலகாட்டுவிளை என்ற கிராமத்தில் பெருமாள் - தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் நாராயணன். அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று, பின்னர் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்து பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
தொழில்நுட்பம் மீது அதீத காதல் கொண்ட நாராயணன் ஆராய்ச்சியில் சாதிக்க வேண்டும் என எண்ணினார். அதன்படி இஸ்ரோவில் 1984 இல் டெக்னீசியனாக பணியில் சேர்ந்த நாராயணன், படிப்படியாக வளர்ச்சி பெற்று இஸ்ரோவில் பல உயரிய பதவிகளை அலங்கரித்தார். அந்த உயரிய பதவிகளுக்கெல்லாம் மகுடமாக தற்போது இஸ்ரோ தலைவர் பதவி அவருக்கு கிடைத்துள்ளது. மிக மிக எளிய பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த நாராயணின் வெற்றி ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.