மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைசானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோல் பட்லர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து இந்திய அணியின் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என்று ஆட்டத்தை பற்ற வைத்த சாம்சன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Second T20I CENTURY for Abhishek Sharma! 💯
— BCCI (@BCCI) February 2, 2025
Wankhede has been entertained and HOW! 🤩#TeamIndia inching closer to 150 🔥
Live ▶️ https://t.co/B13UlBNdFP#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/vY4rtG0CXb
அவர் அவுட்டானால் என்ன நான் இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு சொல்லாமல் சொன்னது போல் தமது வழக்கமான அதிரடி காட்ட தொடங்கினார் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற பாரபட்சமெல்லாம் இல்லாமல், அனைத்து பெளலர்களின் பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரி என்று மைதானத்தின் நாலாப்பக்கமும் சிதறடித்தார் அபிஷேக் சர்மா.
தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் 37 பந்துகளில் 100 ரன்களை குவித்த அவர், டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சஞ்சு சாம்சனை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும்.
முன்னதாக, கடந்த 2017 இல் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சதம் விளாசி, அதிவேக சதமடைந்த இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்,. அவருக்கு அடுத்ததாக 40 பந்துகளில் சதம் அடித்து சஞ்சு சாம்சன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்களை விளாசினார். இதில் 13 சிக்ஸர்களும். 7 பவுண்டரிகளும் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில், பிரைடோன் காரஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.