தூத்துக்குடி: 2006ம் ஆண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு புதிதாக இரண்டு யானைக்குட்டிகள் வரவழைக்கப்பட்டிருந்தன. குமரன், தெய்வானை என பெயரிடப்பட்டிருந்த அந்த இரண்டும் முறையே 3 வயது மற்றும் 6 வயதுடையவை. "வயதில் சிறியதான குமரன் யானை சுட்டித்தனம் மிகுந்ததாக இருந்தது, முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டும் தனது காலை பிணைத்திருந்த சங்கிலியை இழுத்துக் கொண்டும் இருந்தது. தெய்வானை தன்னைக் கட்டியிருந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. ஆனால் அதனிடம் பார்ப்பதற்கு விசித்திரமான பழக்கம் இருந்தது. ஓரு ஆட்டுரலில் மாவாட்டுவது போன்று தனது துதிக்கையை சுற்றிக் கொண்டே இருந்தது" என்கிறார் அந்த வருடத்தில் திருச்செந்தூரில் வசித்தவரான ஈடிவி பாரத்தின் சங்கரநாராயணன்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அதே யானையின் காட்சி வேறு விதமாக நமக்கு கிடைத்திருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரம் அருகே உள்ள யானைக்கொட்டகையில் இருந்து நேற்று (18.11.2024) பிற்பகலில் கிடைத்த காட்சி நெஞ்சை உலுக்குவாக அமைந்தது. இந்த வீடியோவில் முருகன் கோயில் யானையான தெய்வானை தனது கொட்டகையில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. துதிக்கையை சுழற்றியபடி இருக்கும் அந்த யானையை போக்கு காட்டியவாறு இருவர், அதன் காலடியில் இருக்கும் உடல்களை மீட்க முயல்கின்றனர். பாகன்களில் ஒருவர் யானைக்கு சில உத்தரவுகளை வழங்கி அதனை மண்டியிடச் செய்கிறார். யானையிடம் அதன் மொழியில் பேசும் பாகன் அழுது கொண்டே யானையை தேற்றி சாந்தப்படுத்த, ஒருவழியாக உடல்கள் மீட்கப்பட்டன.
யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தோரில் ஒருவர் அதன் பாகனான உதயகுமார் (46), மற்றொருவர் உதயகுமாரை பார்க்க வந்திருந்த அவரது உறவினர் சிசுபாலன். திருச்செந்தூர் முருகன் கோயிலைப் பொறுத்தவரையிலும் இந்து சமய அறநிலையத்துறையின் தகவல்களின் படி தெய்வானை என்ற 25 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகன்களாக உதயகுமார் (47) , செந்தில்குமார் (46), ராதாகிருஷ்ணன் (57) ஆகியோர் உள்ளனர். இவர்களில் உதயகுமாரும் செந்தில்குமாரும் சகோதரர்கள் , ராதாகிருஷ்ணன் இவர்களின் தாய் மாமா ஆவார்.
என்ன நடந்தது என்பது தொடர்பாக பாகன்களின் உறவினர்களிடம் விசாரித்த போது, மரணமடைந்த சிசுபாலன் பாகன்களின் உறவினர் எனக் கூறினர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரின் தந்தையும் யானைப்பாகன் தான். சிசுபாலன் யானைப்பாகனாக வேண்டும் என ஆசைப்பட்டாலும், ராணுவத்திலிருந்து திரும்பும் போது வயது அதிகமானதால் யானைப்பாகனாக முடியவில்லை என கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
யானை தாக்கிய சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த பக்தர்களிடம் பேசியபோது, யானைக் கொட்டைகயினுள் இருந்த சிசுபாலனைத் தான் யானை முதலில் தாக்கியதாகக் கூறினர். இதனால் அவரை காப்பாற்ற முயன்ற உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது. ஈடிவி பாரத்திடம் பேசிய திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின், சிசுபாலன் யானையை தொட்டவாறு செல்ஃபி எடுத்துள்ளார். தன்னை புதிய நபர் தொடுவதை ஏற்றுக் கொள்ளாத தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. உதயகுமாரை தாக்கிய பின்னர் தான் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து கொண்டுள்ளது. இதனால் அவரை துதிக்கையால் தொட்டு எழுப்ப முயன்றதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர் என்கிறார். உதயகுமார் மயங்கியநிலையில் இருந்ததால் மீண்டும் சிசுபாலனை தனது காலடியில் போட்டு தாக்கியதாகவும் கவின் குறிப்பிடுகிறார்.
பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் மரணம் நிகழ்ந்ததால், கோயில் நடை சாத்தப்பட்டு, சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் பேசுகையில், திருச்செந்தூர் யானை தெய்வானை மிகவும் அமைதியான மிருகம். யானை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மிருகம். யானையின் நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உணவு உட்கொள்ளாது. பாகன் மரணமடைந்த பின்னர் பல மணி நேரத்திற்கு தெய்வானை யானை உணவு உட்கொள்ளவில்லை என கூறினார்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கோயில்களில் யானைகளின் பங்களிப்பு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. சுவாமி ஊர்வலம் தொடங்கி, கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் யானைகளும் சேர்ந்தே பயணிக்கின்றன. ஆடி சுவாதி நட்சத்திரம் என்ற திருவிழாவுக்காக ஆண்டு தோறும் உடல் முழுவதும் விபூதி பூசி யானை காட்சியளிக்கும் நிகழ்வும் ஆண்டுதோறும் திருச்செந்தூரில் நிகழ்கிறது." என குறிப்பிடுகிறார் திருச்செந்தூரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புகழ்மிக்க யானைகளான புருஷோத்தமன், சாந்தி போன்ற யானைகள் வளர்க்கப்பட்டன. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உயரம் கொண்ட புருஷோத்தமன் யானை திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு 2005ம் ஆண்டு சாந்தி யானை மரணமடைந்த நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டாக நிரந்தர யானை இன்றி திருச்செந்தூர் கோயில் இருந்தது. அப்போது கோயிலின் தக்கார் எனப்படும் நியமன நிர்வாகியாக இருந்த தேவதாச சுந்தரம் தமது சொந்த செலவில் இரண்டு யானைகளையும் வாங்கி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய அவர்," நான் தக்காராக பொறுப்பேற்ற போது கோயிலில் யானை இல்லை. திருவிழாக்காலங்களில் பொம்மை யானையை வைத்து மக்கள் வழிபட்டனர். கோயிலில் யானை இல்லை என ஆதங்கத்தோடு என்னை சந்தித்த பொதுமக்கள் கூறியதால் இரண்டு யானைகளை எனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தேன்" என்றார்.
"நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வேன் செல்லும்போது யானையை மறக்காமல் சந்திப்பேன் யானைக்கு பழங்கள் வாங்கி கொடுப்பேன் தெய்வானை இரண்டு பேரை கொன்றுவிட்டது என்பது இப்போது தான் தெரிகிறது அது இது போன்று கோபமாக நடந்து கொள்ளாதே" என்றும் தேவதாச சுந்தரம் கூறினார். தேவதாச சுந்தரம் சென்னையின் பிரபலமான CEE DEE YES கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நெல்லை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டார்.
குமரன் , தெய்வானை என இரண்டுமே திருச்செந்தூருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குமரன் யானை 2015ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தது. தற்போது தெய்வானை யானை தாக்கி இருவர் மரணமடைந்திருப்பது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், பொதுவாக ஆண்யானைகளுக்கு மட்டுமே மதம் பிடிக்கும், பெண் யானைகளுக்கு மஸ்து நேர்வதில்லை என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கோயில்களின் திருவிழாக்களில் யானைகளின் பங்களிப்பு பாரம்பரிய தொடர்புடையது. இருப்பினும் ஆண் யானைகளை கோயில்களில் வளர்க்க அனுமதி இல்லை. மாறாக கேரளாவில் எல்லா கோயில்களிலும், தனியாரிடமும் பிரமாண்டமான ஆண் யானைகள் இருப்பதைப் பார்க்கலாம். இதே போன்று வனத்துறையின் யானைகள் முகாமுக்கு வெளியே வளர்ப்பு யானைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இதனால் புதிய யானைகள் கோயில்களுக்கு வாங்குவதென்றால் வெளிமாநிலங்களில் இருந்ததுதான் வரவழைக்க வேண்டியதாக உள்ளது.
இப்படி அசாம் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு யானைக்கும் தெய்வானை என பெயரிடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றத்தில் பணியில் இருந்த தெய்வானை 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் யானைப் பாகனின் உதவியாளராக இருந்த (காவடி) காளிதாஸ் என்பவரைக் கொன்றது பதிவானது. இதனையடுத்து இந்த யானை திருச்சியில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு (Elephant Rescue and Rehabilitation Centre) அனுப்பப்பட்டிருந்தது.
அங்கிருந்து இந்த யானையை இதன் சொந்த ஊரான அசாமுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர் என்பதைக் குறிப்பிடுகிறார் விலங்குகள் நல ஆர்வலரான அந்தோனி ரூபின் (Antony Rubin). இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆவணங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஆவணங்களின் படி தெய்வானையின் அசாம் மாநிலப் பெயர் பிரேரோனா (Prerona ). இது அம்மாநிலத்தைச் சேர்ந்த லிலா போரா (Lila Bora) என்பவருக்கு சொந்தமானது. குத்தகையாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இந்த யானையை தமிழ்நாட்டில் வைத்திருப்பதற்கான குத்தகை அவகாசம் 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இருப்பினும் அசாம் மாநில வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தெய்வானையின் இருப்பு தமிழ்நாட்டிலேயே தொடர்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள்,"திருப்பரங்குன்றத்தில் இருந்த தெய்வானை யானை பாகனை அடித்து கொன்றதை அடுத்து எம் ஆர் பாளையம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு பயிற்சி வழங்க ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது." என குறிப்பிட்டனர்.
யானையைப் பற்றி பேசும் போது கவிஞர் சச்சிதானந்தனின் "நினைவில் காடுள்ள மிருகம்" என்ற வரி பொதுவாக மேற்கோள் காட்டப்படுகிறது. இது குறித்து பேசிய ஓசை அமைப்பின் காளிதாஸ், என்னதான் வளர்ப்பு யானையாக இருந்தாலும் "என்னதான் வளர்ப்பு யானையாக இருந்தாலும் அதுவும் காட்டு உயிர் தான்" என கூறுகிறார். யானைகளின் பாதங்கள் மிகவும் மென்மையானவை, காடுகளில் சுற்றித்திரியும் யானைகள் நகரங்களில் உள்ள தார்ச்சாலைகள், சிமெண்ட் சாலைகளில் நடக்கும் போது அவற்றின் கால்கள் பாதிக்கப்படும் என்கிறார்.
இயல்புக்கு மாறான சூழல்களால் யானைகளுக்கு தொடர்ந்து மனஅழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கோவில்களில் விசேஷ நாட்களில் அதன் மீது துணிகளை போட்டு அலங்கரிப்பதால் வியர்வை சுரப்பி இல்லாத அந்த யானைகளுக்கு மேலும் மன அழுத்தம் ஏற்படும், இப்படிப்பட்ட சூழலில் தான் பாகன்களை யானைகள் தாக்கும் சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கோவில் யானைகளை பராமரிப்பது குறித்து விரிவான வழிகாட்டுதல், புதிய அணுகுமுறை தேவை என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.