சென்னை: மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது, தமிழக அரசின் சிறப்பு ரொக்கப் பரிசு ரூபாய் ஐந்து லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது 2021ஆம் ஆண்டு முதல் ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகக் கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி ஆர்.முருகவேலுக்கு 2024ஆம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கி கௌரவித்தார்.
சி.நாராயணசாமி நாயுடு விருது பெற்ற விவசாயி முருகவேல் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், "நான் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்து அதிகளவில் மகசூல் பெற்றதற்கு முதலமைச்சரால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முதலமைச்சருக்கு நன்றி. முதலில் நான் எனது நிலத்தில் தக்கை பூண்டு விதைத்து அதனை உரமாக மாற்றினேன்.
பின், நெல் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் மேம்படுத்தப்பட்ட MTU-1262 என்னும் அதிக விளைச்சல் கொடுக்கும் நெல்லை பயிர் செய்தேன். முதலில் இந்த ரக நெல்லை நாற்றங்காலில் விதைத்து, 14 நாட்கள் பராமரிப்பு செய்தேன். மேலும் வயலினை நன்றாக உழுது, பசுந்தாள் உர விதைகளை விதைத்து. விதைத்த 45 ஆம் நாளில் மீண்டும் மடக்கி உழுது. நீர் பாய்ச்சி வயலை நடவிற்கு தயார் செய்தேன். பின்னர் நாற்றாங்காலில் இருந்து 14 நாட்கள் வயது கொண்ட நெல் நாற்றுகளைத் தேர்வு செய்து, அவற்றின் வேர்ப்பகுதியை, உயிர் உரக் கரைசலில் நன்கு நனைத்து, அவற்றை இடைவெளியில், ஒற்றை நாற்று முறையில், வரிசையாக நடவு செய்தோம்.
இதையும் படிங்க: 76-வது குடியரசு தின விழா: மயிலாடுதுறையில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ஆட்சியர் மகாபாரதி!
நெல் பயிருக்கு அடியுரமாக ஏக்கர் ஒன்றுக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு. 100 கிலோ காம்ப்ளக்ஸ் உரம், 10 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை போட்டேன். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களையும் போட்டோம். மேலுரமாக, ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ யூரியா மற்றும் 10 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை நடவு நட்ட வயலில் போட்டேன்.
கோனோ களைக்கருவி கொண்டு, நடவு நட்ட வயல்களில் காணப்படும் களைகளை மடக்கி அதனையும் உரமாக மாற்றினேன். பின் காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற முறையில், நீர் மேலாண்மை செய்துள்ளேன். மேலும், நெல் பயிருக்கு சேதம் விளைவிக்கும் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்திட, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை வேளாண்மைத் துறை அலுவலரின் அறிவுறுத்தல் பேரில் செய்தோம். இதனால் எக்டருக்கு 10,815 கிலோ மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் திருந்திய நெல் சாகுப்படியை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி செய்ய முடியும். விவசாயத்தில் அதிகளவில் நவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்று முருகவேல் தெரிவித்தார்.