ETV Bharat / state

இனி ரயில்கள் ஓடாது பறக்கும்..! 30 நிமிடத்தில் சென்னை to பெங்களூரு.. ஐஐடியின் ஹைப்பர்லூப் ஆராய்ச்சி - Chennai Hyperloop - CHENNAI HYPERLOOP

Madrass IIT: மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் செல்லும ரயில் சேவையான ஹைப்பர்லூப் தொடர்பான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான சோதனை பாதையில் 2025ஆம் ஆண்டு உலகளவிலான போட்டி நடத்தப்பட உள்ளதாகவும், 2 ஆண்டுகளுக்கு பின்னர் சரக்கு போக்குவரத்திற்காக நாட்டின் முதல் ஹைப்பர்லூப் பாதை தயாராகும் என ஈடிவி பாரத்திற்கு சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 11:34 AM IST

சென்னை: வானில் பறக்கும் விமானங்கள் ஏன் அவ்வளவு வேகத்தில் செல்கின்றன? தண்டவாளங்களில் செல்லும் ரயில்களால் அவ்வளவு வேகத்தை எட்ட முடிவதில்லை என என்றாவது சிந்தித்ததுண்டா. இந்த சிந்தனையின் விடை தான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம். எந்த பொருளும் தரையுடன் உராய்வு இருக்கும் போது அதன் வேகம் மட்டுப்படும், ஆனால் பறக்கும் போது உராய்வினால் ஏற்படும் தடை நீங்கிவிடும். இதுவே காற்றில்லா வெற்றிடத்தில் பறக்கும் போது, காற்றின் தடையும் நீங்கி அதிவேகம் கிடைக்கும். இதுதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் அடிப்படை.

பரவலாக இந்த ஹைப்பர்லூப் பற்றிய ஆராய்ச்சிகள் 1960களிலேயே இருந்தாலும், 2012ம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இத்தொழில்நுட்பத்தின் புதிய ஆராய்ச்சியை அறிவித்தார். ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் பயன்பாட்டுக்கும் வரும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் வலுப்பெறவில்லை. இந்த சூழலில்தான் இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான வலுவான அடித்தளத்தை நிறுவியிருக்கிறது சென்னை ஐஐடி.

இத்திட்டத்திற்காக சென்னை ஐஐடியில் அவிஷ்கர் ஹைப்பர்லூப் (Avishkar Hyperloop) என்ற மாணவர்களின் குழு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 11 வகையான படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்றுவரும் 76 மாணவர்களை உள்ளடக்கியதாக இந்த குழு அமைந்துள்ளது. இவர்கள் ஹைப்பர்லூப்பின் பல்வேறு கட்டங்களை வடிவமைத்து வருகின்றனர்.

ஹைப்பர்லூப்-ஐ பொறுத்தவரையிலும் மூன்று பகுதிகள் முக்கியமானவை.

1.லூப் (குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதி)

2.பாட் (ரயில்பெட்டி போன்ற வாகனம்)

3.டெர்மினல் (பெட்டிகள் நிறுத்தும் பகுதி)

பாட் எனப்படும் ரயில்பெட்டியை 3 கட்டங்களாக அவிஷ்கர் குழுவினர் மேம்படுத்தியுள்ளனர். நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹைப்பர்லூப் பாட்-ற்கு கருடா என பெயரிட்டுள்ளனர்.

பாட் பயணிப்பதற்கான லூப் பாதை சோதனை ஓட்டத்திற்காக 425 மீட்டர் தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையை அடுத்த தையூரில் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் இந்த பாதையில் சர்வதேச அளவிலான போட்டி 2025ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "சென்னை ஐஐடியால் வடிவமைக்கப்படும் ஹைப்பர்லூப் 4 கட்டங்களாக ஆராய்ச்சி செய்யப்படும். முதலில் பாட் எனப்படும் தண்டவளத்தை வடிவமைப்பதாகும். சதாரணமாக ஒரு டிராக்கில் (தண்டவாளத்தில்) செல்லும் போது வேகமாக செல்ல முடியாது. டிராக்கில் இருந்து ஒரு இன்ச் மேலே தூக்கி சென்றால் தான் வேகமாக செல்லும்.

ஹைப்பர்லூப் செயல்படுத்துவது எப்படி? விமானம் மேலே காற்றில் செல்லும் போது வேகமாக செல்வதையும், சாலையில் செல்லும் வாகனம் வேகம் குறைவாக செல்வதையும் பார்க்கிறோமே அதே போன்றுத் தான். திறந்த வெளியில் காந்தசக்தியை (Levitation) வைத்து இயக்குவது என்பது ஒரு திட்டம். அப்படி செல்லும் போது, காற்று ஏற்படுத்தும் தடைகளால் வேகமாக செல்ல முடியாமல் இருக்கிறது.

அடுத்த நிலையில் ஒரு டியூப் போட்டு, அதில் காற்றின் அழுத்தத்தை குறைத்து காந்த சக்தி மூலம் இயக்கினால் ஒரு மணி நேரத்திற்கு 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியும். அடுத்த 3-ஆவது நிலையில் டியூப்க்குள் சரக்கு வைத்து அனுப்பலாம். அதனைத் தொடர்ந்து மனிதர்களை வைத்து அனுப்ப வேண்டும்" என்கிறார். அதாவது குறைந்த காற்றழுத்தம் கொண்ட இந்த டியூபினுள் தண்டவாளத்திலிருந்து ஒரு அங்குல உயரத்தில் ரயில்பெட்டி பறக்கும். சுற்றி அமைக்கப்பட்டுள்ள குழாய் போன்ற டியூபினால் வெளிப்புற காற்றின் தாக்கம் இருக்காது. இதனால் பெட்டிகள் ஓடாது. இதற்கு பதிலாக தடையின்றி பறக்கும்.

"வெற்றிடமான டியூபில் அதிக வேகத்தில் செல்லும் போது மனிதனுக்கு என்ன ஆகிறது என்பதற்கான ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். 4 கட்ட நிலையில் ஆராய்ச்சிகள் செய்யப்படுகிறது. முதல் கட்டத்தில் காந்த சக்தியை பயன்படுத்தி பெட்டி பறந்து பயணிக்கும் சோதனை முடிந்து விட்டது. 2ஆம் கட்டத்தில் வெற்றிடத்தில் சோதனை செய்வதற்கான டியூபை 425 மீட்டருக்கு வடிவமைத்து பொருத்தி உள்ளோம்.

ஆசியாவிலேயே அதிக நீளம் உள்ள ஹைப்பர்லூப் டியூப் இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சோதனைகளை செய்வதுடன், சர்வதேச அளவிலான போட்டிகளையும் நடத்த வேண்டும். அதில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். அதில் பரிசு பெறுவர்களை மேலும் ஊக்கப்படுத்துவது தான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழிமுறையாகும்" என்றார் ஐஐடி இயக்குநர் காமகோடி. இந்த ஆராய்ச்சிக்கான தளம் அமைக்க எல்அண்டி (L&T) மற்றும் இந்திய ரயில்வே சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர்லூப்பை வணிக ரீதியாக்கும் திட்டம்: சோதனை முயற்சிகள் சரிதான், இது எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 30 நிமிடத்தில் செல்வது எப்போது என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினோம். இதற்கு பதிலளித்து பேசிய அவர், "இதனை வணிக ரீதியாக கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகளும் நடக்கின்றன. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் சென்டர் பார் ரயில்வே ரிசர்ச் என்ற அமைப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த கூட்டு முயற்சியின் கீழ், அரசாங்கம் டிராக் அமைத்த பின்னர் பாட் எனப்படும் வாகனத்தை செய்து அதில் முதலில் சரக்குகளை அனுப்ப வேண்டும்.

அதில் எத்தனை கிலோ சரக்குகளை எப்படி எடுத்துக் கொண்டு செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். எனவே படிப்படியாக செயல்படுத்த வேண்டும். மனிதர்களை அனுப்பும் போது அதில் நிலையான வழிகாட்டுதல்களை (Standard Operation Procedure) பின்பற்ற வேண்டி இருக்கும். ஹைப்பர்லூப் இயக்குவதற்கும் நிலையான வழிகாட்டுதல்களை வடிவமைக்க வேண்டும்.

பின்னர் ஹைப்பர்லூப்பில் சரக்குகளை அனுப்பலாம். அடுத்ததாக மனிதர்களை அனுப்ப சோதனை செய்ய வேண்டும். முதலில் முழு காற்றோட்டதிலும், பின்னர் காற்றின் அளவை குறைத்தும் வைத்து சோதனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்டமாக சரக்குகளை வைத்து அனுப்புவதும், மனிதர்களை அனுப்பும் போது என்னவாகும் என்பதும் தான் அடுத்த நிலையாகும்" எனக் கூறினார்.

சர்வதேச அளவிலான ஹைப்பர்லூப் போட்டி: மேலும் சர்வதேச அளவிலான போட்டி குறித்து காமகோடி கூறுகையில், "ஹைப்பர்லூப் சர்வதேச போட்டி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மழை உள்ளிட்ட காலநிலையை பெறுத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். தையூர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹைப்பர்லூப் டியூபில் சோதனைகளை செய்வோம். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் சோதனை செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

பயன்பாட்டிற்கு வருவது எப்போது? மேலும் பேசிய அவர், "சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரையில் சரக்கு போக்குவரத்திற்காக ஹைப்பர்லூப் வழித்தடத்தை அமைக்கலாமா என்பது ஆலோசனையாக இருக்கிறது. முதல் வெற்றி சரக்கு போக்குவரத்தில் வரும். அடுத்ததாக சென்னை முதல் பெங்களுரு வரை 350 கி.மீ. பாதையை ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுத்தால் ஆறே மாதங்களில் பணிகளை முடித்துவிடலாம்.

இந்த தொழில்நுட்பத்தை பொருத்தவரையில் ரயில்வே தண்டவாளங்கள் போன்று தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது இல்லை. ஆங்காங்கே, டியூப்களை செய்து விட்டு அதனை இணைத்துக் கொள்ளலாம். தற்போது உள்ள 425 மீட்டர் டிராக் நன்றாக வேலைச் செய்தால், இத்தொழில்நுட்பம் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக இந்தியா முழுவதும் டிராக் போட முன்வரும். சரக்குப் போக்குவரத்திற்கு இரண்டரை ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வரும். மேலும், 5 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் செல்வதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படுவதால் மாசு ஏற்படாது" என தெரிவித்தார்.

இன்றைக்கு பொதுப்பயன்பாட்டில் இருக்கும் விமானம், ரயில்வே போன்ற சேவைகளும் ஒரு காலத்தில் இது போன்று அடிப்படை ஆராய்ச்சியில் இருந்தவைதான். ஹைப்பர்லூப் என்பதும் நாளைய தொழில்நுட்பத்திற்கான இன்றைய முன்னேற்பாடாகத் தான் கருத வேண்டும். காந்த விசையின் அடிப்படையில் ரயில்கள் பறப்பதும் புதிய தொழில்நுட்பம் அல்ல ஜப்பானில் புல்லட் ரயில்களில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இதற்கு தனியான தண்டவாளம் உள்ளிட்ட அமைப்புகள் தேவைப்படுவதால், மாக்ளேவ் (maglev trains) என்ற ரயில்களின் சேவை பிறந்தது. இந்த ரயில்கள் தற்போதைக்கு சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டவை. இதே தொழில்நுட்பத்தில் வெற்றிடத்தில் ரயில்களை பயணிக்கச் செய்வதன் மூலம் மணிக்கு 700 முதல் 900 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்ட வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 30 நிமிட பயணம் என்ற கனவை சாத்தியமாக்கும் முயற்சியில் முக்கிய மைல் கல்தான் சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஈடிவி பாரத் எதிரொலி; ஜீரோ டிராபிக் பெருங்களத்தூர்.. நாளை மேம்பாலம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.