கோயம்புத்தூர்: கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பதிவாகும் வெப்ப நிலையை விட அதிகமாக பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் மதிய வேளைகளில் மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து வருகின்றனர். மேலும், உணவு டெலிவரி செய்வோர், மார்க்கெட்டிங் பணியில் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவதால் தாகத்தை தணிக்க தர்பூசணி, பழச்சாறுகளை உண்டு அருந்தி வருகின்றனர். இதனால் பழ விற்பனை முன்கூட்டியே சூடு பிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சாலையோர தர்பூசணி வியாபாரி பாருக் கூறுகையில், '' கடந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்த நிலையில் பழ விற்பனை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, கரும்புச்சாறு, பழச்சாறு போன்றவற்றை அருந்துகின்றனர். தமிழ்நாட்டில் தர்பூசணி சீசன் துவங்கி உள்ள நிலையில் இன்னும் முழுமையாக காய்கள் வராததால் தற்போது கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் தர்பூசணி பழங்கள் வந்துள்ளன. இனிவரும் நாட்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும்'' என்றார்.
வாகன ஓட்டிகள் அவதி
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், '' கோவை என்றாலே குளுமை; மற்ற மாவட்டங்களை காட்டிலும் குளுமையாக இருக்கும். ஊட்டியை போன்ற சீதோஷனம் இருக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாக கோவையில் அதன் தன்மை மாறி வருகிறது. குளிர்ந்த நிலை மாறி தற்போது அதிக வெப்பநிலை கோவையில் நிலவுகிறது. கடந்த ஆண்டு அதிக வெப்ப நிலை பதிவான நிலையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பிப்ரவரி மே மாதம் போல உள்ளது. இதனை சமாளிக்க மதிய நேரங்களில் நீர் சத்து அதிகமுள்ள தர்பூசணி பழங்களை சாப்பிடுகிறோம்'' என தெரிவித்தனர்.
கோவையில் தற்போது வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு;
அதிகபட்ச வெப்பநிலை
பருவமழை காலம் மற்றும் குளிர் காலம் முடிந்து தற்போது பகல் நேர வெப்பம் அதிகரித்து வருவது, கோடைக்காலம் துவங்குவதன் அறிகுறியாகும். வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை என்பது 30.2 டிகிரி செல்சியஸ். பிப்ரவரி மாதத்தில் இதுவரை பதிவான வெப்ப நிலையில் அளவு 32.4 டிகிரி செல்சியஸ்.
கோவை மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை இந்தாண்டில் 34 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. இதுவே கோவையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
வெப்பநிலை கடுமையாக இருக்குமா?
வெயில் சில நாட்கள் அதிகரித்து காணப்படுவதும், சில நாட்களில் குறைந்து இருப்பதாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாகவும், கிழக்கில் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என அறிவியல்பூர்வமாக சொல்ல முடியாது.
என்ன காரணம்?
பருவநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நகரப்பகுதிகளில் கட்டிடங்களின் அளவு அதிகரிப்பு, மரங்கள், நீர்ப்பரப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெயிலின் தாக்கம் அதிகமுள்ள மதிய நேரங்களில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
எதை பயிரிடலாம்?
மழைப்பொழிவை பொறுத்து விவசாயிகள் மண்ணின் ஈரம் குறைய குறைய பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எள் போன்ற பயிர்களை பயிரிடலாம். வெள்ளை ஈக்கள் மற்றும் கருந்தலை புழுக்கள் பாதிப்பு இருந்தால் பூச்சியல் துறை மூலமாக உயிர்கொல்லிகளை பெற்று பயன்படுத்தலாம். அதேசமயம் கோடை காலத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் வெயிலால் மக்கள் அச்சப்பட தேவையில்லை'' என்றார்.