கோயம்புத்தூர்: மும்மொழிக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திறன் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் ஆளும் திமுக அரசை அசைத்துப் பார்க்க நினைத்தால், அவர்கள் கனவு பலிக்காது என பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் கணினி மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு நேர்காணல் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது. இந்த நேர்காணலில் தேர்வான ஆயிரம் இளம் பெண்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், திமுக மாநில பொறியாளர் அணியின் செயலாளர் கருணா மற்றும் பொள்ளச்சி எம்பி ஈஸ்வரசாமி கலந்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முன்மொழிக் கல்வி கொள்கையை திணிக்க முயற்சி:
பின்னர் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு மாதம் ரூ.1000 மற்றும் இலவச பேருந்து என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். பெண்களின் நலன் கருதி மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டில் முன்மொழிக் கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது. முதலமைச்சர் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.
இதையும் படிங்க: இந்தி படிக்க வேண்டும் என்று நிர்பந்தம் கிடையாது; 'தமிழை நேசியுங்கள்' - இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் சு. முருகன்! |
மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திறன் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் ஆளும் திமுக அரசை அசைத்துப் பார்க்க நினைத்தால், அவர்கள் கனவு பலிக்காது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணா கூறுகையில், “இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 45 சதவீதம் தமிழகத்தில் உள்ளனர் என்ற என்ற சாதனையை இந்த அரசு புரிந்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ல பெண்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் மட்டும் 2,500 பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.