திருப்பூர்: அண்ணனை தம்பி வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (54). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரை காணவில்லை என இவரது மகன் பிரவீன் குமார் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர் . இதில் இவருக்கும் இவரது சித்தப்பா மகன் ரமேஷ் (41) என்பவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிர்ச்சிகரமான பல்வேறு தகவல் வெளியானது.
விசாரணையில், ரமேஷுக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரமேஷ் கருவலூர் அருகே இருக்கும் தோட்டத்து பகுதியில் கோவிந்தசாமியை சந்தித்து இந்த சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு கோவிந்தசாமி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ரமேஷ் கோவிந்தசாமியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, என்ன செய்வது என்று அறியாமல், உயிரிழந்த கோவிந்தசாமியின் உடலை அருகில் இருந்த கோழிப்பண்ணைக்கு ரமேஷ் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி குன்னத்தூர் அருகே இருக்கும் குளத்தில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால், குளத்தில் மூட்டைகள் இருப்பதை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) தொரவலூர் குளத்தில் துர்நாற்றத்துடன் மூட்டை ஒன்று மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். அங்கு, சாக்கு மூட்டை மிதப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து, போலீசார் விசாரணை செய்ததில், மூட்டையில் இருந்தது கோவிந்தசாமியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது தலை, கை உள்ளிட்ட பாகங்கள் அதில் இல்லாததால், போலீசார் தொடர்ந்து ரமேஷிடம் விசாரணை நடத்தினர். இதில், தலையை கோழிப்பணைக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசியதாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தலையை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, கோவிந்தசாமியின் கை, கால்கள் எங்கு வீசப்பட்டுள்ளது என்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கும், குளத்திற்கும் 22 கிமீ உள்ளதால் எவ்வாறு உடலை அவர் கொண்டு வந்து குளத்தில் போட்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பசம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.