தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிய நபரை சில மணி நேரங்களில் போலீசார் தேடி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டதுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை சாலையில் 75 வயது மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.
இது குறித்து மூதாட்டி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை: எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து தங்க செயினை பறித்து சென்றது கும்பகோணம் அருகேயுள்ள மாத்தி கீழத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (49) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்து மூதாட்டியிடம் இருந்து பறித்த தங்க சங்கிலியை மீட்டனர். மேலும், கைதான ரவிச்சந்திரனிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் நபரை பிடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகையை பத்திரமாக மீட்டு கொடுத்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் மற்றும் தனிப்படையினரை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் வெகுவாக பாராட்டினர்.