மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் ரூ.916 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு வருமானமான ரூ.893 கோடியை காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும் எனவும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, நேற்று (ஜன.26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக குடியரசு தினவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
அதையடுத்து விழாவில் பேசிய அவர், "கடந்த டிசம்பர் வரை மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் ரூ.916 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு வருமானமான ரூ.893 கோடியை காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும். அதேபோல, பயணிகள் போக்குவரத்து வருமானமும் ரூ.587.19 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு வருமானமான ரூ.541.66 கோடியை காட்டிலும் 8.4 சதவீதம் அதிகமாகும். சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.264.42 கோடியும்; விளம்பரம், வாகன காப்பகம் போன்ற ஒப்பந்தங்களில் மூலம் இதர பிரிவுகள் வருமானமாக ரூ.20.30 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.
இரண்டாவது ஆண்டாக முதல் இடம்:
அதைத் தொடர்ந்து பேசிய அவர், மதுரை கோட்டத்தில் இருந்து 940 சரக்கு ரயில்களில் 2 மில்லியன் டன் சரக்குகள் முக்கிய ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்தில் மொபைல் போன்களுக்கான மின்னூட்ட கடை, பயணிகளது உடைமைகளை பாதுகாக்க மின்னணு வைப்பறைகள், ரயில்வே காலனியில் பலசரக்கு கடை போன்ற ஒப்பந்தங்களின் மூலம் ரூ.3.88 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மதுரையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் மூலம் ரூ.12 லட்சமும், ராமேஸ்வரம் தங்கும் விடுதி வருவாயாக ரூ.23 லட்சமும் ஈட்டப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள பிரதம மந்திரி குறைந்த விலை மருந்து கடை ஒப்பந்தம் வாயிலாக ரூ.1.20 லட்சம் ரயில்வே துறை கணக்கில் சேர்ந்துள்ளது.
ஊழியர்களின் அதிதீவிர உழைப்பால் மதுரை கோட்டத்தில் விரைவு ரயில்கள் மற்றும் முன்பதிவில்லாத ரயில்கள் முறையே 98.23, 99.03 சதவீதம் காலம் தவறாமையை கடைப்பிடித்துள்ளன. வழக்கமான ரயில்களுடன் 1,152 தனியார் சுற்றுலா ரயில்களும், 38 பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதல் நிலை வகித்து வருகிறது.
Unreserved பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:
சரக்கு ரயில்கள் மணிக்கு 38.67 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இது கடந்த ஆண்டு காட்டிலும் 9.58 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதம் வரை மதுரை கோட்டத்தில் ரயில்களில் 32.59 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் மற்றும் மொபைல் பயணச்சீட்டு செயலி ஆகியவற்றை பயன்படுத்தி முன்பதிவில்லாத பயண சீட்டு பதிவு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பயணிகளின் புகார்கள் வெகுவாக குறைந்த நிலையில் புகார்களை விரைவாக கையாளும் நிலை குறித்து 70 சதவீதம் பேர் நற்குறியீடு வழங்கியுள்ளனர். ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நிலையம் ஒரு பொருள் கடைகளில் வாயிலாக உள்ளூர் தயாரிப்புகள் ரூ.1.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 14 ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக குடிநீர் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள்:
பயணிகள் வசதிக்காக 11 ரயில் நிலையங்களில் கூடுதலாக நடைமேடை மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 ரயில் நிலையங்களில் கூடுதல் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி இறங்க 6 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மேலும் 30 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுத்தம், சுகாதாரம் பேண 7 ரயில் நிலையங்களில் தயார் நிலையில் உள்ள சிறுநீர்ப்பிறைகள் நிறுவப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பிற்காக வையம்பட்டி, சமுத்திரம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமுக்கி பணி நடைபெற்று வருகிறது. ரயில்வே விரைவான போக்குவரத்திற்கு ரயில் பாதை பலப்படுத்தப்பட்டு 17 இடங்களில் இருந்த நிரந்தர வேகத்தடை நீக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை:
மேலும், ரயில் பாதைகளில் வெள்ள நீர் சூழ்வதை தடுக்க திண்டுக்கல் - திருச்சி இடையே இரண்டு இடங்களில் பாலங்கள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கீகாரமற்ற முறையில் பயண சீட்டு விற்ற 69 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.9.72 லட்சம் மதிப்பிலான பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.150.05 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருகின்ற தேர்தலில்.. மதுரை அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?
ஊழியர்களின் குறைகளுக்கு தீர்வு:
ரயில் நிலையங்களை அசுத்தம் செய்த 5,015 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து அபதாரமாக ரூ.10.27 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்வே-யில் பணியாற்றி மரணம் அடைந்த மற்றும் மருத்துவ தகுதி இழந்த ஊழியர்களின் வாரிசுகள் 28 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 602 ரயில்வே ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 351 ரயில்வே ஊழியர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
அவரது உரையின் இறுதியாக பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள், படிக்கட்டுகளில் பயணம் செய்யாதீர்கள், ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் ஏதாவது தவறுதலாக தெரிந்தால் அவற்றை உடனடியாக ரயில்வே ஊழியர் கவனத்திற்கு கொண்டுவந்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை நாய்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எம்.சிவதாஸ் ஆகியோர் உட்பட ரயில்வே அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.