மதுரை: சிவகங்கையை சேர்ந்த இளங்கோ என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், 'புதுக்கோட்டை லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே செண்பகம்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இரண்டுக்கும் இடையே 60 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும். இது சுங்க கட்டண விதிகளுக்கு எதிரானது. எனவே, ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, லெம்பளக்குடி சுங்கச்சாவடியை அகற்றவும், செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியைத் தக்கவைக்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு!
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மனுதாரர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சுவாமிநாதன், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், லெம்பளக்குடி சுங்கசாவடி 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி; மதுரையில் மல்லி பூ விலை எவ்வளவு தெரியுமா...?
ஆனால் செண்பகம்பேட்டையில் உள்ள டோல் பிளாசா 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலையின் அதே பகுதியில் அமைந்துள்ளன. எனவே சிவகங்கை மாவட்டம், செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறுவதாக உள்ளது. எனவே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.