மதுரை: மதுரை மாநகருக்கு உட்பட்ட மின் பகிர்மான அலுவலகங்களுக்கு உட்பட்ட இணைப்புகளில் கடந்த 4 ஆண்டுகளில் 66 ஆயிரத்து 933 மின் அளவீட்டுப் பெட்டிகள் (மீட்டர் பெட்டிகள்) பழுதடைந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வாயிலாக வெளியான பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சத்யசாய் நகரைச் சேர்ந்த இந்தியன் குரல் உதவி மையம் என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஆர்டிஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மின் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், "தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மின் பகிர்மான அலுவலகங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ஒரு முனை (சிங்கிள் பேஸ்) மற்றும் மும்முனை (திரி பேஸ்) மின் அளவீட்டுப் பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) பழுதடைந்த விபரம் தருமாறு" கோரியிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆர்டிஐ பதிலில், "மதுரை பெருநகருக்கு உட்பட்ட மின் பகிர்மான அலுவலகங்களின் கீழ், மதுரையின் வட பகுதியில் ஒரு முனை மீட்டர் பெட்டிகள் 18,033, மும்முனை மீட்டர் பெட்டிகள் 7,826, வணிக நோக்கு மும்முனைப் பெட்டிகள் 154, தென் பகுதியில் ஒரு முனை மீட்டர் பெட்டிகள் 10,452, மும்முனைப் பெட்டிகள் 3,126, வணிக நோக்கு மும்முனைப் பெட்டிகள் 229, மேற்குப் பகுதியில் ஒரு முனை மீட்டர் பெட்டிகள் 21,088, மும்முனைப் பெட்டிகள் 5,923, வணிக நோக்கு பெட்டிகள் 102 என 49 ஆயிரத்து 573 ஒருமுனைப் பெட்டிகளும், 16 ஆயிரத்து 875 மும்முனைப் பெட்டிகளும், 485 வணிக நோக்குப் பெட்டிகளும் என மொத்தம் 66 ஆயிரத்து 933 மீட்டர் பெட்டிகள் பழுதடைந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் கூறுகையில், "பொதுவாக மின் வாரிய அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் மின் அளவீட்டுப் பெட்டிகள் தரம் குறைந்தவையாக உள்ளன. அதுமட்டுமன்றி, மின் அழுத்தத்தில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கம் காரணமாக இந்தப் பெட்டிகள் பழுதடையக் காரணமாக அமைகின்றன. அதனால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ஓராண்டில் 2.5% அதிகரிப்பு - ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்!
உதாரணமாக எனது தோட்டத்தில் மும்முனை இணைப்பு உள்ளது. அங்கிருந்த மின் அளவீட்டுப் பெட்டி பழுதடைந்தது. கடந்த 3 மாதங்களாக மழை பெய்தது, அதனால் தோட்டத்தில் உள்ள மின்சார மோட்டாரை பயன்படுத்தவேயில்லை. உடனடியாக சோழவந்தான் மின் வாரிய உதவி பொறியாளருக்கு கடிதம் எழுதித் தகவல் அளித்தும், குறைந்தபட்சக் கட்டணம் விதிக்காமல், பழுதான காலத்திற்கு முன்பாக 6 மாத மின் நுகர்வின் சராசரியை எனக்கு மின் கட்டணமாக விதித்தார்கள்.
இதனை எவ்வாறு ஏற்க இயலும்? மேலும் வயர்மேன் பற்றாக்குறையின் காரணமாக மின்வாரியத்திற்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் மூலம் பணி பார்ப்பதால் மின் கம்பிகளை மாற்றி இணைத்து விடுவதால் மின் அளவீட்டு பெட்டிகள் பழுதாகின்றன. ஆகையால், மின் வாரியம் தரமான மின் அளவீட்டுப் பெட்டிகளை வாங்குவதுடன், மின் விநியோகத்தில் ஏற்படுகின்ற மின் அழுத்தக் குறைபாடுகளை உடனடியாகக் களைய வேண்டும். மின்வாரியத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களை வைத்து வேலை வாங்க கூடாது" எனத் தெரிவித்தார்.