சேலம்: சேலத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை சூறையாடியதாக பாமக பிரமுகர் மீது தொழிலதிபர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே பழனியப்பா நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் கட்டிடத்தின் உரிமையாளர் குமரவேல் முருகேசனை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு முருகேசன் 20 நாட்கள் கால அவகாசம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2024 மார்ச் 9 ஆம் தேதி முருகேசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், பீரோ, குளிர்சாதன பெட்டிகள் மற்றும் அலுவலகத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது! புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு!
இதையடுத்து அலுவலகத்தின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார். சூரமங்கலம் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதன் பிறகு பல மாதங்களாகியும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த முருகேசன் இன்று (ஜன.27) சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து முருகேசன் தெரிவிக்கையில், '' கட்டிடத்தின் உரிமையாளர் குமரவேலுக்கு ஆதரவாக, கீரைபாப்பம்பாடி பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் லட்சுமணன் அடியாட்களுடன் அத்துமீறி அலுவலகத்தை சூறையாடியதாக எங்களுக்கு தெரிகிறது. இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி காவல்துறையினர் எனது மனைவியை மிரட்டி காவல் நிலைய ஆர்சிஎஸ்ஐ வீசி எறிந்து சென்றுள்ளனர். அந்த நோட்டீசை ரத்து செய்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று முருகேசன் கோரிக்கை வைத்துள்ளார்.