பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் தை மாதத்தை முன்னிட்டு, தற்போது நடந்து வரும் மகா கும்பமேளாவில் மங்களகரமான மௌனி அமாவாசை புனித நீராடல் நிகழ்வு புதன்கிழமையான இன்று (ஜன.29) நடந்து வருகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றுவருவோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பு சுவர் உடைந்ததால் நெரிசல்: புனித நீராடலில் நடந்த சோக விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்திய கும்பமேளாவின் சிறப்புப் பணி அதிகாரி அகன்க்ஷா ராணா, "தடுப்புச் சுவர் உடைந்து ஏற்பட்ட விபத்தில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக எங்களிடம் இல்லை. இருந்தாலும் நிலைமை மோசமாக இல்லை. காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
பிரயாக்ராஜ் மௌனி அமாவாசை அன்று நடைபெறும் தீர்த்தவாரி என்பது மகா கும்பமேளாவில் மிக முக்கயமான சடங்குகளில் ஒன்று. கிட்டத்தட்ட 144 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாண்டு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில், 10 கோடிக்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்டு, புனித நீராட வருகை தந்துள்ளனர்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் கூடியதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால், பாதுகாப்புக்காக வைத்திருந்த தடுப்புச் சுவர் உடைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், தற்போது காயமடைந்தவர்கள் மேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மருதமலையில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை.. 160 அடிக்கு அமைக்க திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்!
திடீரென தள்ளுமுள்ளு: இதுகுறித்து கும்பமேளாவுக்கு வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சரோஜினி என்ற பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் 60 பேர் கொண்ட ஒரு குழு இரண்டு பேருந்துகளில் கும்பமேளாவுக்கு வந்தோம். திடீரென கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், நாங்கள் அதில் சிக்கிக்கொண்டோம். தப்பிக்க வாய்ப்பே இல்லாமல், அனைத்துப் பக்கத்திலிருந்தும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்களில் பலர் தடுமாறி கீழே விழுந்தோம். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" எனக் கதறி அழுதார்.
இந்த சம்பவம் கங்கை, யமுனா மற்றும் புராண சரஸ்வதி (Ganga, Yamuna, mythical Saraswati River) ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக மௌனி அமாவாசையின் போது இங்கு நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இதனால் மக்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் அல்லது முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
महाकुम्भ-2025, प्रयागराज आए प्रिय श्रद्धालुओं,
— Yogi Adityanath (@myogiadityanath) January 29, 2025
माँ गंगा के जिस घाट के आप समीप हैं, वहीं स्नान करें, संगम नोज की ओर जाने का प्रयास न करें।
आप सभी प्रशासन के निर्देशों का अनुपालन करें, व्यवस्था बनाने में सहयोग करें।
संगम के सभी घाटों पर शांतिपूर्वक स्नान हो रहा है। किसी भी अफवाह…
பிரதமர் இரங்கல்: இந்த நிலையில், இவ்விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தொடர்பு கொண்டு பிரக்யாக்ராஜ் மகா கும்பமேளாவின் நிலைமை குறித்துக் கேட்டறிந்ததாகவும், யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், பிரயாக்ராஜ் நகரில் உள்ள மக்களும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
25 லட்சம் நிிதியுதவி: இதனிடையே, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.