உடலின் மிக முக்கியமான உறுப்பாக இருக்கும் மூளை, எந்த வேலையையும் செய்வதற்கும் உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுவதில் தொடங்கி முழு உடலை கட்டுப்படுத்துகிறது. ஆனால், சில சமயங்களில் நமக்கே தெரியாமல் நாம் பின்பற்றும் சில அன்றாட பழக்கங்களை மூளையை சேதப்படுத்துகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக நேரம் அமர்ந்திருப்பது: ஹார்வர்ட் ஹெல்த் ஆராய்ச்சியில், சராசரி வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் அமர்ந்திருப்பதாகவும், இது மூளையில் பல விளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளது. மேலும், அதிக நேரம் அமர்வது, மூளையில் நினைவாற்றலுக்கு தொடர்பான நரம்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை தடுக்க ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 5 நிமிட இடைவேளி எடுத்து ஸ்ட்ரெச்சிங், நடப்பது, ஸ்க்வாட்ஸ், புஷ்- அப் போன்றவற்றை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தூக்கமின்மை: மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் போதிய தூக்கம் இல்லாமலும், ஏழு முதல் எட்டு மணி நேரம் தடையின்றி தூங்குவது இல்லை என அமெரிக்காவின் CDC நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய தூக்கம் இல்லாதது, அறிவாற்றல் திறன்களை குறைப்பதற்கு வழிவகிக்கிறது.சரியான மூளை செயல்பாடுக்கு தூங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இரவு தூங்கும் நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி திரைகளில் இருந்து விலகி வாசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
தனிமையில் அதிக நேரம் செலவிடுவது: நவீன வாழ்க்கை முறையின் அழுத்தங்களால், மனிதர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து பலரும் தனிமையில் நேரத்தை செலவிட ஏங்குகிறார்கள். தூக்கமின்மை மூளைக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்க கூடியதோ அதே அளவிற்கு தனிமையும் மூளையை பாதிக்கும்.
நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் இருக்கும்போது, உங்கள் மூளை சமூக தொடர்புகளிலிருந்து தூண்டுதலைப் பெறுகிறது. இதுவே, தனியாக இருக்கும்போது, உங்கள் மூளைக்கு அதே தூண்டுதல் கிடைக்காது என்பதால் இவை, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் டிமென்ஷியாவுக்கு கூட வழிவகுக்கும். உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிகமாக உண்பது: ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், உங்கள் மூளையின் ஆரோக்கியம் குறைவதற்கான மற்றொரு காரணம், அதிகமாக சாப்பிடுவது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயதானவர்களில் நினைவாற்றல் இழப்பு மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிகமாக சாப்பிடுவது முக்கிய காரணியாக இருக்கிறது. அதனால், ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்கின்றனர்.
ஹெட்ஃபோன் பயன்பாடு: மன மற்றும் உடல் ஓய்விற்காக இசையைக் கேட்டாலும் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது, காது கேட்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஹெட்ஃபோன் அதிகமாக பயன்படுத்துவது மூளையில் நினைவுகளை சேமிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதிகப்படியான எதிர்மறை எண்ணங்கள்: எதிர்மறை சிந்தனை நிச்சயமாக உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இதனால் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் டிமென்ஷியா போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: உடலில் மக்னீசியம் குறைபாடு: அதிகரிப்பதற்கான 7 உணவுகள்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்