சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஜோடிகளான இரண்டாம் நிலை வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் மற்றும் நடப்பு சாம்பியன் ராம்குமார் ராமநாதன் - சாகேத் மைனேனி ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக் - ஜப்பானின் ரியோ நோகுச்சிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு நேரத்திற்கு மேலாக ஆட்டம் நடைப்பெற்றது.
மற்றொரு இரட்டையர் போட்டியில் கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற இந்திய அணியின் ராமநாதன் - மைனேனி ஜோடி வெளிநாட்டு ஜோடியான எகோர் அகஃபோனோவ் - எவ்ஜெனி டியுர்னேவ் ஆகியோரை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் இந்திய ஜோடிகள் வெற்றி பெற்றால் சனிக்கிழமை நடைப்பெறும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.
நாளை நடைப்பெறும் அறையிறுதி போட்டியில் இந்திய ஜோடி நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜப்பானிய ஜோடியான ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகியை ஆகியோருடன் மோதுகின்றனர்.
மற்றொரு அறையிறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி ராமநாதன் - மைனேனி தொடரின் முதல் நிலை வீரர்களான ரே ஹோ - மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸை எதிர்கொள்கிறார்கள்.
இதனிடையே, இன்று நடைப்பெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தொடரின் முதல்நிலை வீரரான பில்லி ஹாரிஸ், துருக்கியின் எர்கு கிர்கினை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னாள் அமெரிக்க ஓபன் காலிறுதிப் போட்டியாளரான ஹாரிஸை, செக் குடியரசு வீரர் டாலிபோர் ஸ்வர்சினா 6-1, 6-1 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்,
இன்னொரு போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியாளர் அஸ்லான் கரட்சேவ் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தானின் டிமோஃபி ஸ்கடோவிடம் 6-4, 7-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டிகளும், இரட்டையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிகளும் நாளை (பிப்.7) நடைபெறுகின்றன.