கட்டாக்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து அசத்தினார். சுப்மன் கில் 60 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்தின் 305 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் அரைசதம் அடித்து அணிக்கு 304 ரன்களை சேர்க்க உதவினர். இந்திய அணியின் பந்து வீச்சின்போது ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங் பிரிவு
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய பேட்டிங் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் நல்ல ஃபார்முக்கு திரும்பியது அணிக்கு நல்ல அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. அதே போல, இந்தியாவின் சுழற்பந்து வீச்சு தாக்குதல் மிகவும் சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாகக் கையாள முடியவில்லை.
இதுவரை இரு அணிகளும் 108 முறை மோதியுள்ள நிலையில் அதிகபட்சமாக இந்தியா 59 போட்டிகளில் வென்றுள்ளது. இங்கிலாந்து 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி.
இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், பிலிப் சால்ட், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷீத், மார்க் வுட்.
மூன்றாவது ஒருநாள் போட்டி விவரம்
நாள்: பிப்ரவரி 12, 2025
இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
நேரம்: மதியம் 1:30 (இந்திய நேரப்படி)
நேரடி ஒளிபரப்பு: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
தொலைக்காட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (HD & SD)