மதுரை: தேனி மாவட்ட மத்திய மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட சில உயர் அலுவலர்களின் பயணப்படி மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ஏறக்குறைய ரூ.14 லட்சம் என ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த “இந்தியன் குரல் உதவி மையம்” என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆர்டிஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஆர்டிஐ வாயிலாக மதுரை மின் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மின் பகிர்மான அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பயணத்தொகையாகப் பெற்ற மொத்த தொகை குறித்த தகவல் அளிக்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில் மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வர வேண்டிய மேற்படி ஆர்டிஐ தகவலில், தற்போது தேனி மாவட்டத்திலிருந்து மட்டும் என்.ஜி.மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள தகவலின் அடிப்படையில், தேனி மாவட்ட மத்திய அலுவலக மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரூ.5,65,115, செயற்பொறியாளர் (பொது) ரூ.4,96,356, தேனி செயற்பொறியாளர் (பகிர்மானம்) ரூ.27,715, சின்னமனூர் செயற்பொறியாளர் (பகிர்மானம்) ரூ.34,800, பெரியகுளம் செயற்பொறியாளர் (பகிர்மானம்) ரூ.30,958, தேனி செயற்பொறியாளர் (இயக்கம்) ரூ.2,18,970, தப்புக்குண்டு செயற்பொறியாளர் (இயக்கம்) ரூ.4,271 என மொத்தம் 13 லட்சத்து 78 ஆயிரத்து 185 ரூபாயை பயணப்படியாகப் பெற்றுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இதுபோக எட்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் அவர்களின் பதவிக்கு ஏற்ப சதவிகித அடிப்படையில் பயணப்படி பெறுகின்றனர். இருந்தும் ஒவ்வொரு அரசு சார்ந்த அலுவலுக்கும் ஒரு கட்டணம் என நிர்ணயம் செய்து வைத்துக் கொண்டு லஞ்சமும் கேட்கிறார்கள்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டம் ரத்து: கனி, நெல்லுடன் சென்று எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!
இதனால், நாள்தோறும் ஏதாவது ஒரு மின்வாரிய அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டும் இவர்கள் திருந்த மறுக்கிறார்கள். இவர்களால் மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு இந்த ஆர்டிஐ தகவலே சாட்சி.
இது போன்ற மின்வாரிய அலுவலர்களால் பலமுறை நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனை வெளியே சொல்ல முடியாத பாமர மக்கள் எனக்குத் தெரிந்தே நிறைய பேர் உள்ளனர். சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் இவர்கள் தப்பிக்கலாம். ஆனால், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நினைக்க வேண்டும். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” எனத் தெரிவித்தார்.