தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் நேற்று (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு உலக நன்மைக்காக, விவசாயம் செழிக்க வேண்டி, 1 லட்சத்து 8 எலுமிச்சை யாகம் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடிகை தர்ஷா குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்றைய தினம் தூத்துக்குடியில் உள்ள பிரத்யங்கரா கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டேன். இக்கோயிலில் நினைத்த காரியம் நடப்பதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் தூத்துக்குடிக்கு வந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு, மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றார்.
மேலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகியவற்றில் பங்கேற்றேன். அடுத்த லெவலுக்கு முன்னேறி போக வேண்டும் என்பதற்காக, வேண்டுதலின் அடிப்படையில் தான் இங்கு வந்தேன். ஹீரோயின் கதையம்சம் கொண்ட ஒரு நல்ல படத்திற்காக தான் காத்திருப்பதாக கூறினார். எனக்கு கமல் சார் ரொம்ப பிடிக்கும், அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் பீட்சா படம் முதல் அவரது தீவிர ரசிகை, அவரைப் பார்த்ததே மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்ட போது, “பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தது தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய அவர், அங்கு நன்றாக சமைத்து சாப்பிட்டு, மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருந்தது என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்மிக சுற்றுப்பயணம், திருச்செந்தூர், கேரளா கோயில்களுக்கு சென்றுவிட்டு, தற்போது தூத்துக்குடி வந்துள்ளதாக” கூறினார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர் களத்தில் போய் நின்றாலே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும். நானும் அவர் அடுத்த முதல்வராக வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு புதிதாக என்ன செய்யப் போகிறார்? என்ன புதிதாக நடக்கப்போகிறது? என்பதை பார்ப்பதில் தனக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது" கூறினார்.
இதையும் படிங்க: மநீம கட்சியில் இருந்து விலகிய நடிகை வினோதினி.. இதுதான் காரணமா? - ACTRESS VINODHINI VAIDYNATHAN
விஜய் கட்சியில் சேர அழைப்பு வந்தால் சேருவீர்களா? என்ற கேள்விக்கு, “என்னை கட்சியில் சேருமாறு அவர் கூப்பிட்டால் உடனே சென்று, சேர்ந்து விடுவேன், அதுவும் பதவி வழங்கினால் நன்றாக இருக்கும்” என்றார். இந்த பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.