கோயம்புத்தூர்: தமிழீழத்தில் தங்கி இருந்த சீமான் தமிழீழ விடுதலை புலிகளை உளவு பார்த்து சிங்கள அரசிற்கு தகவல் கொடுத்ததாக திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பகிரங்கமாக குற்றசாட்டி உள்ளார்.
கோவை கொடிசியா அருகே உள்ள நேரு நகர் பகுதியில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், '' சீமானின் பொய்களை நம்பி வாழ்க்கையை இழந்த எண்ணற்றவர்களில் நானும் ஒருவன்.
தமிழ் ஈழத்திற்கு திராவிட இயக்க தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் அங்கு சென்று வந்தாலும் அந்த மண் அழியப்படவில்லை. யாராலும் காட்டிக் கொடுக்கப்படவில்லை. சீமான் போய் வந்த பிறகு ஒட்டுமொத்தமாக தமிழீழ மண் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றசாட்டுகளை முன்வைக்க விரும்புகிறோம்.
ஆறு, ஏழு மாதங்களாக தமிழீழத்தில் தங்கி இருந்த சீமான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள், யாரெல்லாம் தளபதிகள் என்பவை குறித்து உளவு பார்த்து சிங்கள அரசிற்கும், பன்னாட்டு அரசிற்கும் தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறோம்.
பிரபாகரனை 10 நிமிடங்கள் கூட சந்திக்கவில்லை
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த அறிக்கையில், 'இயக்குநர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள சீமான் - பிரபாகரன் இருக்கின்ற புகைப்படம் தன்னால் எடிட் செய்யப்பட்டது' என்று கூறினார். 'பிரபாகரனை சீமான் 10 நிமிடங்கள் கூட சந்திக்கவில்லை' என்று ராஜ்குமார் கூறுகிறார். இது சம்பந்தமாக நிலவி வரும் விஷயங்கள் தமிழ், தமிழீழம் என்று இன்று உணர்வுடன் இருக்கும் எங்களை சீமான் ஏமாற்றி இருக்கிறார் என்று எண்ணப்படுகிறது.
ஈழத்திலிருந்து வந்த அவர் அங்கு என்ன நடந்தது என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை? ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசி கைது செய்யப்பட்ட பிறகு 2008 ஆம் ஆண்டு இறுதியில் கோவை சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஈழ ஆதரவிற்காக போராடாமல் போராட்ட களத்திற்கு செல்லாமல் மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார்.
பிரபாகரன் இறப்பு
பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் இளைஞர்களிடம் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பிரபாகரனின் இறப்பை மறைத்து தமிழ்நாட்டில் எண்ணில் அடங்காத இளைஞர்களின் அரசியலை சிதைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் அடைக்கலமாக இருந்து கொண்டு தமிழீழ விடுதலை புலிகள் போராளிகளை காட்டி கொடுத்திருக்கிறார். அதற்கு சிரஞ்சீவி என்ற ஒருவரை குறிப்பிட்டிருக்கிறார். அவரைக் காட்டிக் கொடுத்தவர் சீமான் தான். தற்போது அவர் ஆர்எஸ்எஸ் கைக்கூலியாக இருக்கிறார்.
விஜய் வேடிக்கை பார்ப்பது அயோக்கியத்தனம்
சீமான் பாஜகவால் இயக்கப்படுகிறார் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில அங்கீகாரம் வாங்கி கொடுத்தது விஜய் தான். தற்போது விஜய்க்கு ஆதரவு வருவதால் விஜயை கொச்சையாக பேசி வருகிறார். பெரியார் குறித்து சீமான் அவதூறு பேசிய பிறகு எந்தவொரு காட்டமான அறிவிப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் இருந்து வரப்படவில்லை. திராவிட இயக்கத்தின் ஆசானை கொச்சைப்படுத்துகின்றபோது எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள், விஜய் போன்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பது அயோக்கியத்தனம்'' என்று ராஜீவ் காந்தி தெரிவித்தார்.