ஈரோடு: தமிழகமே உற்று நோக்கும் இரண்டாவது முறையாக நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய 33 வார்டுகளுக்குட்பட்ட 53 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1,194 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியை மேற்கொண்டனர். துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 2,678 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள், காலை முதலே நீண்டவரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை மாலை ஆறு மணி உடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 5 மணி நிலவரப்படி, 64.02% சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு சித்தோடு அருகே உள்ள போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் அவை வைக்கப்பட்டுள்ளன. வரும் 8 ஆம் தேதி காலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இறுதி நிலவரம் எப்போது?: முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்காரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் வாக்குச்சாவடி வாரியாக கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இணையத்தில் பதிவேற்ற 12 மணி வரை கால அவகாசம் இருக்கிறது, அதற்குள்ளாக இறுதி வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்குப்பின்,ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அவை எடுத்துச் செல்லப்பட உள்ளன.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக ஒரே ஒரு புகார் மட்டும் வர பெற்றிருக்கிறது. ஆனால் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இல்லை. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தான் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
14 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டுவிட்டன" என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா தெரிவித்தார்.
கடந்த 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பெரியாரின் பேரனும் ஆகிய ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவரும் கடந்த ஆண்டு இறுதியில் காலமானதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இரண்டாவது முறையாக இன்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.