சென்னை: நாட்டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு 'இந்திய குடியரசும், டாக்டர் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் காங்கிரஸ் எம்பி சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "அம்பேத்கரைப் பற்றி அனைத்து தரப்பும் இன்றைக்கு விரிவாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலே குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் மிக ஆழமாக புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி படிக்கவும், விவாதிக்கவும் மக்களிடத்திலே பரப்புகின்ற பணிகளை மேற்கொண்டு இருப்பது ஒரு நல்ல அறிகுறி. தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதற்கான ஒரு களமாகக் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் களம் அமைந்திருக்கிறது.
முதன் முதலாக ஒரு தலைவரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் இந்திய ஒன்றிய அரசின் சார்பிலே இந்திய மொழிகள் யாவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட பெருமை புரட்சியாளர் அம்பேத்கருக்கு மட்டுமே உண்டு. புரட்சிகர அரசியலைப் பேசுகிற கம்யூனிஸ்ட் இயக்கங்களும், இன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி விவாதிக்கிற ஒரு சூழல் கனிந்திருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவையின் புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்துகிறது என்பதை எண்ணி நான் பெருமையும், மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு இன்று சென்னையில் நடைபெற்ற 'இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்' என்னும் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரையாற்றினேன். pic.twitter.com/7RzPjHNPPC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 26, 2025
நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானம்:
- புரட்சியாளர் அம்பேத்கரை இந்திய குடியரசின் தந்தை என்று அழைக்க வேண்டும்.
- உச்ச நீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.
- உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்கிற தீர்மானம். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவையின் சார்பில் இங்கே முன்மொழியப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இட ஒதுக்கீட்டுக்கு நெருக்கடி தருவது எது?:
இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இன்னும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக இடம்பெற முடியும் என்கிற சூழல் ஏன் நீடிக்கிறது? ஏன் அதை மாற்ற முடியவில்லை? உச்ச நீதிமன்றத்திலேயே நியமிக்கப்பட்டிருக்கிற நீதிபதிகளில் எத்தனை பேர் ஓபிசி சமூகத்தைச் சார்ந்தவர்கள்? எத்தனை பேர் தலித் சமூகத்தைப் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள்? அதனை ஒன்று இரண்டு என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைதான்.
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்து விட்டது. குடியரசாகி 75 ஆண்டுகளை முடித்து 76 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. முக்கால் நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் கூட, உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறிய மாற்றத்தைக் கூட நம்மால் செய்ய முடியவில்லை. அங்கு அசைத்துப் பார்க்க முடியவில்லை என்ற அளவுக்கு இங்கே எது அதிகமாக இருக்கிறது. நீதிபதிகள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு இங்கே நெருக்கடியை எது தருகிறது? ஏன் அது நீடிக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சனாதனம்:
சனாதனம் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்றால் நிலையானது என்று பொருள். அதாவது, நிலையானது, மாறாதது, முடிவில்லாதது, தொடக்கம் இல்லாதது இதுதான் சனாதனம். சாமி கும்பிடுவதில் அது கஸ்டம்ஸ், திருநீறு பூசுவது அல்ல அது சடங்கு, ருத்ராட்ச கொட்டை அணிவது அல்ல சனாதனம் அது சம்பிரதாயம்; சடங்கு, சம்பிரதாயங்களைக் குறிப்பது அல்ல சனாதனம், அது ஒரு கோட்பாடு, எல்லாம் நிலையானது.
நாங்கள் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்கள் என்பது நிலையானது, பிராமணர்களின் ஆதிக்கம் என்பது நிலையானது. நாங்கள் உழைக்காமலேயே உண்டு கொடுப்போம் என்பது நிலையானது. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்போம் என்பது நிலையானது. உச்ச நீதிமன்றம் எங்களுக்கானது, அது நிலையானது, மாற்ற முடியாதது இது தான் சனாதன தர்மம்.
விடுதலை சிறுத்தை என ஒரு கட்சி இருக்கிறது, அதேபோல டிஎஸ்பி ஒரு கட்சி இருக்கிறது ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயரில் கட்சியில் இயங்குகின்றன. கட்சிகள் அடிப்படையில் அம்பேத்கர் கொள்கையை எடுத்துக் கொண்டு பரப்புகின்றன. அதுபோலத்தான் ஆன்மீக தத்துவங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயரைப் பரப்புகிறார்கள், அது மதங்களாக மாறுகின்றன.
சாதி பார்க்காமல் இன்று எதுவும் இல்லை:
கௌதம புத்தர் உருவாக்கியது மதமல்ல; ஏனென்றால் மதம் என்றால் முதலில் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆதிக்கம் எந்த வடிவத்திலிருந்தாலும் எதிர்க்க வேண்டும். ஒடுக்குமுறை எந்த வடிவத்திலிருந்தாலும் எதிர்க்க வேண்டும். சுரண்டல் எந்த வடிவத்திலிருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும். இவையெல்லாம் பெருகுவதற்கு எது அடிப்படையாக இருக்கிறது, மனிதர் இடத்தில் இருக்கிற பேரால், ஆசைதான்; தனி உடைமை என்பது அப்படித்தான் உருவாகிறது. தனி சொத்துரிமை, பணக்கார வர்க்கம், அதிகார வர்க்கம் என்பதெல்லாம் அப்படித்தான் உருவாகிறது.
இதையும் படிங்க: ஜகபர் அலி கொலை வழக்கு: முதற்கட்டமாக மனைவியிடம் விசாரணையை துவக்கியது சிபிசிஐடி!
ஆகவே இந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது, அதுதான் பௌத்தத்தின் அடிப்படையில் இவற்றை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு தான் புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல். அரசமைப்புச் சட்டம் தீண்டாமை ஒழிந்து விட்டது என்கிறது. ஆனால் இன்னும் சமூகத்திலே சாதி இருக்கிறது. சாதி அடிப்படையில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. சாதி பார்க்காமல் எந்த செயலும் மனிதக் குலத்தில் இல்லை.
குடியரசைப் பாதுகாக்க என்ன வழி?:
இந்தியாவைப் பொருத்தவரை எந்த செயலும், திட்டமும் கிடையாது. அப்படி ஒரு நிலை இங்கே நீடிப்பதற்கு என்ன அடையாளமாக நமக்கு உணர்த்துகிறது என்றால், எதை அடையாளப்படுத்துகிறது என்றால் சனாதன தர்மமே இன்னும் இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் அல்ல. எனவே அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் போராட வேண்டும்.
நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக இருக்கக்கூடாது; நாம் அடையாள அரசியலைப் பிடித்து தொங்கக்கூடியவர்கள் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கரை சாதி அடையாளமாக நாம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு மத அடையாளமாக நாம் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
அம்பேத்கரையும், பெரியாரையும், மாமேதை மார்க்ஸ்-யையும் கோட்பாட்டு அடையாளங்களாக நாம் பார்க்கிறோம். இடதுசாரி அரசியலின் அடையாளங்களாக தான் நாம் பார்க்கிறோம், முற்போக்கு சிந்தனையின் அடையாளங்களாக தான் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் இந்த அரசியலை நாம் முன்னெடுப்போம் அப்போது தான் இந்த தேசத்தை பாதுகாக்க முடியும். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமே இந்த குடியரசைப் பாதுகாக்க முடியும்" எனத் தெரிவித்தார்.