சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (ஜன.26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார் கூறுகையில், '' பொருளாதாரத்தில் இந்தியா முதன்மையான நாடாக வர வேண்டும் என்று பிரதமர் மோடி கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்.
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க பாடுபட சபதம் ஏற்போம். டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசும், அண்ணாமலையும்தான் காரணம். விஜய் குறித்து நான் அதிகமாக கருத்து சொல்வது இல்லை. ஆறு மாத காலம் அவர் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப்போகிறார். கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார். தமிழ்நாட்டை வேறொரு பாதையில் எப்படி எடுத்து செல்ல போகிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாநிலத்தில் ஆளுநர் தேவையில்லை என்று விஜய் தனது முதல் மாநாட்டில் கூறினார். அப்படி சொன்ன விஜய் ஆளுநரை எதற்கு நேரில் சென்று சந்தித்தார் என தெரியவில்லை. அஜித் குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கார் ரேஸில் ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பிறகும் கூட சிறந்த முறையில் வழி நடத்தி சென்றிருக்கிறார். குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசு தினம் 2025: அடையாறு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரருக்கு அண்ணா விருது!
அதனை தொடர்ந்து பேசிய குஷ்பு, '' அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். இன்று கமலாலயத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொடியேற்றும் பொழுதும் , தேசிய கீதம் பாடும் பொழுதும் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுதும் வரும் உணர்வு அனைத்தும் நமக்கு இந்தியர்கள் என்ற உணர்வை கொடுக்கும்'' என்றார்.
வேங்கை வயல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த குஷ்பு, '' நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும், சரத்குமாரும் கட்சி அலுவலகம் வரவில்லை. தேர்தல் பரப்புரையில் தனித்தனியாக ஈடுபட்டு இருந்தோம். பிரதமர் சேலம் வந்த போது ஒரே மேடையில் இருந்தோம். நடிகர் அஜித்கு மாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலையாவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம். ஆனால், முதலமைச்சர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள செல்வது அவருக்கு சிறிய சந்தோசம் செல்லட்டும்" என்றார்.