சென்னை: இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அர்பணிப்போடு சேவைகளில் ஈடுபடுவர்களை பாராட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த அமீர் பெயரினால் கோட்டை அமீர் என்ற பெயரால் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்தை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வழங்கினார். கோட்டை அமீர் விருது பெற்ற அமீர் அம்சா ஈடிவி பாரத்திற்கு தனது குடும்பத்தினருடன் அளித்த சிறப்பு பேட்டியில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை காவல்துறையின் உதவியுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். இதுவரை 15,000 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.
மேலும் இறந்தவர்களின் முறைப்படி அவர்களின் உடல்களை அடக்கம் செய்வோம். காவல்துறையினர் அழைத்து எந்த நேரத்தில் உடலை எடுக்க வேண்டும் என கூறினாலும் சென்று எடுத்து வந்து அடக்கம் செய்வேன். கெரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்ட காலங்களில் சுமார் 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். கெரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 700 நபர்களுக்கு மருத்துவம் மற்றும் தேவையான உதவிகளை செய்துள்ளேன்.
இரு சக்கர வாகனம் பழுது பார்த்து வருகிறேன். அதில் வரும் வருமானத்தில் குடும்பத்திற்கும் செலவிட்டு வருகிறேன். மேலும் உடல்களை அடக்கம் செய்யும் போது, ஏற்படும் கூடுதல் செலவிற்கு எனது மாமாவும் எனக்கு நிதி உதவி வழங்குவார். உடல்களை பெற்று சாதி, மதம் பார்க்காமல் எடுத்து வந்து, இறந்தவரின் முறைப்படி உடலை அடக்கம் செய்கிறோம்.
தற்பொழுது சிறிய வாகனத்தில் உடல்களை எடுத்து வருகிறேன். அரசு பெரிய டிராவல்ஸ் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினால் உடல்களை எடுத்து அடக்கம் செய்ய உதவியாக இருக்கும். இந்த சேவையை எனது குடும்பத்தில் உள்ளவர்களும் வரவேற்கின்றனர்” என்றார்.
இதையடுத்து பேசிய விருது பெற்ற அமீர் அம்சாவின் மனைவி அலீமா பானு, “எனது கணவர் இறந்தவர்களின் உடலை எடுத்து அடக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் சற்று அச்சமாக இருந்தது. ஆனால், அவரின் சேவையை பார்க்கும் போது, நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது.. முதல் பரிசு எதற்கு தெரியுமா..?
இரு சக்கரவாகன மெக்கானிக் வேலை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என காவல்துறையினர் கூப்பிட்டால், எந்த நேரமாக இருந்தாலும் சம்பவ இடத்திற்கு சென்று, எத்தனை நாட்களான உடலாக இருந்தாலும் அதனை எடுத்து வந்து அவர்களின் முறைப்படி அடக்கம் செய்துவிட்டு வருவார். இறந்தவர்களின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும், அதனையும் எடுத்து வந்து அடக்கம் செய்வார். அவரின் சேவையைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைக்கிறோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமீர் அம்சாவின் மகன் வாஷிம் கான், “இறந்தவர்களின் உடலை அப்பா எடுத்து அடக்கம் செய்து வருகிறார். நான் படித்துக் கொண்டு இருப்பதால் என்னை அந்தப் பணியில் ஈடுப்படுத்த மறுத்து விட்டார். ஆனால், அதற்கு தேவையான வாகனம் ஏற்பாடு செய்வது, பூமாலை வாங்கி வைப்பது, புதைப்பதற்கு குழி தோண்டுவதற்கு போன்ற பணிகளை பார்வையிடுவேன்” என்றார்.