சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரின் (Chennai Open ATP challenger 2025) தொடக்க சுற்றில் தொடரின் மூன்றாம் நிலை வீரரான டுஜே அஜ்டுகோவிச் மற்றும் நேற்று விளையாடிய இந்திய வீரர்கள் 3 பேரும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.
அதாவது, சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (பிப்.4) நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் இத்தொடரின் முதல் நிலை வீரரான பில்லி ஹாரிஸ் மற்றும் லாயிட் ஹாரிஸ் ஆகியோர் வெற்றியுடன் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
இந்திய வீரர்கள் படுதோல்வி:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 158வது இடத்தில் உள்ள அஜ்டுகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 332வது இடத்தில் உள்ள ஸ்வீடனின் எலியாஸ் ய்மரிடம் 6-2, 6-7, 6-2 என்ற மூன்று செட்களில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று பேரும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை வென்ற 19 வயதுக்கு உட்பட்ட இந்திய மகளிர் அணி...தமிழக வீராங்கனை கமலினிக்கு உற்சாக வரவேற்பு!
இந்தியாவின் கரண் சிங் 6-3, 6-3 என்ற கணக்கில் பிரான்ஸ் நாட்டின் வீரர் கைரியன் ஜாக்கெட்டிடமும், ராம்குமார் ராமநாதன் 6-3, 7-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் ஜே கிளார்க்கிடமும் தோல்வியடைந்தனர். இந்திய வீரர்களில் சிறப்பாக விளையாடி ஒரு செட்டை கைப்பற்றிய முகுந்த் சசிகுமார், ரஷ்ய வீரர் அலெக்ஸி ஜகாரோவிடம் 6-3, 6-7, 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கால் இறுதி வாய்ப்பு:
தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் சித்தாந்த் பந்தியா மற்றும் பரிக்ஷித் சோமானி ஆகியோர் சக இந்திய வீரர்களான சாய் கார்த்திக் ரெட்டி காந்தா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோரை 6-3, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.
இத்தொடரில், இங்கிலாந்தைச் சேர்ந்த முதல் நிலை வீரரான பில்லி ஹாரிஸ் உக்ரைன் வீரர் எரிக் வான்ஷெல்போயிமை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு தகுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டாம் நிலை வீரரான லாயிட் ஹாரிஸ் யுஎஸ் ஓபன் காலிறுதி வீரரான லாயிட் ஹாரிஸ், மற்றொரு உக்ரைன் வீரரான யூரி ஜவாகியனை 6-3, 5-7, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.