மகாகும்ப நகர்: மகாகும்பமேளா நிகழ்வில் இன்று பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அத்துடன் நதியில் நின்றவாறு ருத்ராட்ச மாலையை கையில் வைத்தபடி மந்திரங்கள் சொல்லியும் அவர் வழிபட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம்,மகாகும்ப நகரில் நடைபெற்று வரும் உலகளவில் புகழ்பெற்ற மகாகும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். நிகழ்வில் பங்கேற்பதற்காக, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கும்பமேளா நகருக்கு காலை 10:50 மணியளவில் படகில் புறப்பட்டார்.
அங்கு கங்கா,யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கத்தில் புனித நீராடினார். அதனைத் தொடர்ந்து நதியில் நின்றவாறு கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தியபடி, கண்களை மூடி மந்திரங்கள் ஜெபித்தப்படி சில நிமிடங்கள் அவர் வழிபட்டார். மகா மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினமான இன்று கங்கையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், பிரதமர் மோடி மகாகும்பமேளாவில் இன்று பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பமேளாவில் பங்கேற்றபின் நண்பகல் 11:50 மணியளவில், முக்கிய பிரமுகர்கள் கும்பமேளாவுக்கு அனுமதிக்கப்படும் அரளி கரைக்கு படகின் மூலம் திரும்பிய மோடி, அங்கிருந்து 12:30 மணியளவில் பிரக்யாராஜ் விமான நிலையம் வந்தடைந்தார்.
முன்னதாக, கங்கையில் புனித நீராட வந்த பிரதமர் மோடியை, அரளி கரைப் பகுதியில் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி மகாகும்பமேளாவில் பங்கேற்று கங்கையில் புனித நீராடியுள்ளதன் மூலம் சனாதன தர்மத்துக்கு உலக அளவில் புதிய அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளதாக பக்தர்கள் உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளனர்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா இந்த ஆண்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி (ஜன.13) தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 38 கோடி பக்தர்கள் இதுவரை மகாகும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக, மிகப்பெரிய இந்த வைபவத்தை நடத்திவரும் உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது