இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோர் தினமும் பத்து மணி நேரத்திற்கு மேலாக கணினி, செல்போன் திரையை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பழக்கம் நீண்ட நாட்களுக்கு தொடரும் போது கண் சோர்வு, பார்வை கோளாறு, கண் வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், கண்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும், கண் அழுத்தத்தை தடுப்பதற்கு 20-20-20 விதி உதவியாக இருப்பதாக 2018 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஆப்டோமெட்ரிக் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கணினி அல்லது செல்போன் திரையை பார்க்கும் போது, பெரும்பாலானோர் கண்களை சிமிட்டுவதற்கு மறந்து விடுகிறோம். இதனால், கண்கள் வறண்டு, அசெளகரியம், சோர்வு, தலைவலிக்கு வழிவகுக்கிறது.
20-20-20 விதி என்றால்?: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகள் இடைவெளி எடுத்து, சுமார் 20 அடி தொலைவில் உள்ள பொருளின் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த எளிமையான முறை, கண்ணை சுற்றியுள்ள தசைகளை தளர்த்தி, அழுத்தத்தை குறைக்கிறது.
இது தவிர..,
- நீங்கள் அமர்ந்து வேலைப் பார்க்கும் இடத்தில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால், உற்றுபார்க்கும் பழக்கம் தவிர்க்கப்படுவதால் கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும். குறிப்பாக, குழந்தைகள் படிக்கும் மேசையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்வதால், சிறுவயதிலே கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியும்.
- கண் தசைகளின் அழுத்தத்தைத் குறைக்கவும், வலுப்படுத்தவும் தினசரி கண் பயிற்சி செய்வது அவசியம். தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் கண்களுக்கு என நேரம் ஒதுக்கி, கண்களை உருட்டி பார்ப்பது, தொலைதூரத்தில் உள்ள பொருட்களில் கவனம் செலுத்துவது, 20 நொடிகளுக்கு கண்களை சிமிட்டுவது போன்ற எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
- அலுவலங்களில் கம்ப்யூட்டர் திரைகளில் வேலை பார்ப்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை திசை திருப்புவது அவசியம். உதாரணத்திற்கு, ஒரு மணி நேரம் வேலை பார்த்தால், 2 முதல் 5 நிமிடம் இடைவெளி எடுத்து வேறு எதாவது ஒரு இடத்தை பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர, கண்களுக்கு சற்று தளர்வு கிடைக்கும்.
- பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். பார்வையில் குறைபாடு இருப்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கான மருத்துவத்தை மேற்கொள்ளவும். கண்ணாடி அணிய மருத்துவர்கள் கூறினால், உடனடியாக கண்ணாடி அணியவும். மருத்துவர் பரிந்துரையை மீறி கண்ணாடி அணியாமல் இருந்தால் கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு பிற்காலத்தில் மோசமான நிலையை ஏற்படுத்தும்.
- செல்போன், கம்யூட்டர் மற்றும் லேப்டாப் திரைகளில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியின் வெளிப்பாட்டை குறைக்க கண்ணாடி பயன்படுத்துங்கள். Blue light filter கொண்ட கண்ணாடிகளை அணிவதால் கண் பராமரிக்கப்படுவதோடு, தூக்கத்தின் தரமும் அதிகரிக்கும். இதனால், உடலில் ஏற்படும் மற்ற உபாதைகளை குறைக்கும்.
- திரையின் அமைப்புகளை மாற்றுவது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செல்போன், கம்ப்யூட்டர் மட்டுமல்லாமல் டீவியில் உள்ள திரை அமைப்புகளை மாற்றவும். திரையில் உள்ள எழுத்துகள் படிப்பதற்கு ஏதுவாக அதன் அளவை செட் செய்யவும். அதே போல, நீல நிற ஒளி உமிழ்வை குறைக்கும் ஆஃப்ஷனை குறைக்கவும்.
இதையும் படிங்க: முதுமையில் கூர்மையான பார்வையை தக்கவைக்கும் 6 காய்கறிகள்! குழந்தைகளையும் பாதிக்கும் கண்புரை நோய்: அறிகுறியும், சிகிச்சை முறையும்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்