சென்னை: இந்தியாவில் 76-வது குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் காந்தியடிகள் காவலர் விருது வழங்குவது வழக்கம்.
இந்த விருதானது, தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் தீவிரமாக பணிபுரிந்த தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகளின் பணியை பாராட்டி வழங்கப்படும் விருது. இந்த விருது பெற்றவர்களுக்கு இப்பதக்கம் பெறுபவர்களுக்கு, ரூ.40,000-க்கான காசோலையும், தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான காந்தியடிகள் காவலர் விருது 5 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 1. விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்ன காமணன், 2.விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமைக் காவலர் மகாமார்க்ஸ், 3. துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் க. கார்த்திக், 4. சேலம் மாவட்டம் ஆயுதப்படையை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்கள் சிவா, 5. ப.பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில், காந்தியடிகள் காவலர் விருது பெற்ற காவல் ஆய்வாளர் சின்ன காமணன் ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 18.1.2023 முதல் விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினேன். அப்போது. போலி மதுபானம், அண்டை மாநில மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் இருப்பிடத்தை கண்டறிந்து தலைமையிடத்திற்கு தகவல் தெரிவித்து அழித்தோம். எனது பணியின் போது 12,000 லிட்டர் கள்ளு, போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளேன்.
இதையும் படிங்க: குடியரசு தின தேநீர் விருந்து: இசை, நடனம் என களைகட்டிய ஆளுநர் மாளிகை!
போலி மதுபானம் மற்றும் வெளி மாநில மதுபானங்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 40 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளேன். சாராய கடத்தலில் ஈடுபட்ட 50 முக்கிய குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து அவர்களை கைது செய்துள்ளேன். மேலும் 25 குற்றவாளிகளை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்துள்ளேன். இவர் மதுவிலக்குக் குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளேன். தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளராக உள்ளேன்.
அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டிகள் வருவதை தடுப்பதற்கான பேருந்துகளிலும் சோதனையில் ஈடுபடுவோம். சாராய வியாபாரிகள் பிடிப்பட்டப் பின்னர் அவர்கள் திருந்தி வாழ்வதற்கும் முயற்சிகளை செய்து உதவி உள்ளோம். கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய காவல் ஆய்வாளர் சின்ன காமணன் மனைவி, "எனது கணவர் பணியில் உள்ள ரகசியத்தை கூற மாட்டார். கள்ளச்சாரயத்தை பிடிபட்டது குறித்து செய்திகளில் தான் தெரிந்துக் கொள்வோம். நல்லவர்களுக்கு கடவுள் துணை இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் எனது கணவர் பணிக்கு கிளம்பும் போது ஆறுதல் கூறிக் கொள்வேன். அவர் இந்த விருது பெற்றதில் மிக மகிழ்ச்சி” என தெரிவித்தார்.