பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியானது தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மேம்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டிபாடிகள் மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே நிரம்பியுள்ளது. இதற்கு நிகர் எதுவும் இல்லை.
ஆனால், இளம்தாய்மார்கள் சிலருக்கு போதியளவு தாய்ப்பால் சுரக்காதது இருவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட உணவுகள் மற்றும் உணவுப்பழக்கவழக்கங்கள் பின்பற்றுவதால், பாலூட்டும் தாய்மார்களுக்கு இயற்கையாக பால் சுரப்பதை மேம்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க...
இயற்கையாக பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
ஓட்ஸ்: நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்துக்களால் நிரம்பியுள்ள ஓட்ஸ், பால் சுரப்பதற்கு உதவுவதாக கருதப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க ஓட்ஸ் உதவியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெந்தயம்: பால் உற்பத்தியை அதிகரிக்க பல தலைமுறைகளாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயத்தில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. அந்த வகையில், வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகுவது, வெந்தயப் பொடியை தேநீருடன் பருகுவது, வெந்தய குழம்பு போன்றவற்றை இளம் தாய்மார்கள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, வெந்தயக் கீரையில் வைட்டமின், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
கருவாடு: NCBI நடத்திய ஆய்வில், உலர்ந்த மீன் (கருவாடு) வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முக்கியமான உணவாக இருப்பதாக கூறுகிறது. மேலும், இது தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுவதாகவும், அவர்கள் கருவாடு சாப்பிடும் போது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து பால் மூலம் கிடைப்பதாகவும் கூறுகிறது.
பெருஞ்சீரகம்: இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் (Phytoestrogen) பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. கூடுதலாக, தாய்மார்களுக்கு ஏற்படும் வயிற்று வலியையும் சரிசெய்யும். பெருஞ்சீரகம் ஊற வைத்த தண்ணீரை நேரடியாகவோ அல்லது தேநீருடன் சேர்த்து குடிக்கலாம்.
பூண்டு: பாரம்பரியமாக பால் உற்பத்தியை அதிகரிக்க பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால், வாரத்திற்கு இரண்டு முறை பூண்டு குழம்பு செய்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பூண்டு பால் சுரப்பதற்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
புரதம் நிறைந்த உணவுகள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள புரதம் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதாக கூறுகிறார், குழந்தை நல மருத்துவர் டாக்டர் பல்லவி. மேலும், பாலில் உள்ள கால்சியம் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கிறார்.
கீரை: பாலக் கீரை, வெந்தயக் கீரையில் உள்ள வைட்டமின்,கால்சியம் மற்றும் இரும்புச்சத்து பால் சுரப்பதை அதிகரிக்கின்றது. பாலூட்டும் தாய்மார்கள் தினசரி உணவில் ஒரு வேளையாவது கீரை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
நீரேற்றமாக இருப்பது அவசியம்: பால் உற்பத்தி செய்ய நீரேற்றமாக இருப்பது அவசியம். நாள் முழுவதும், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் இயற்கை சாறுகளை உட்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: 'குழந்தையின் முதல் 1000 நாட்களுக்கு கருவாடு அவசியம்'..ருசியாக இருக்கும் கருவாட்டில் இவ்வளவு நன்மைகளா? சர்வதேச ஆய்வு!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்