புதுடெல்லி: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்க வகை செய்யும் ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்பட இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார். இது வேளாண் விளை பொருட்கள் விற்பனையில் இடைத் தரகர்களின் செயல்பாட்டை முழுமையாக தடுக்கும் என கூறினார்.
குடியரசு தின அணிவகுப்புக்குப் பிறகு சுமார் 400 விவசாயிகளுடன் டெல்லியில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உரையாடினார். அப்போது அவரிடம், "பண்ணையிலிருந்து நுகர்வோர்" மாதிரியானது விவசாயிகள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உதவும் என்று வலியுறுத்தப்பட்டது.
"விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, விவசாயிகள் அதன் ஆன்மா. விவசாயிகள் இல்லாமல், இந்தியா செழிக்க முடியாது," என்று அவர் கூறினார். மேலும் வேளாண் துறை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசு விவசாயிகளை முழுமையாக ஆதரிக்கும் என்று சௌஹான் கூறினார்.
"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும். மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசும் உங்களை ஆதரிக்கும்" என்று அவர் உறுதியளித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) பயிர்களை கொள்முதல் செய்தல், தொழில்நுட்ப தீர்வுகளை ஊக்குவித்தல், கிருஷி விஞ்ஞான் மையங்களை வலுப்படுத்துதல், இயற்கை விவசாயம் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.
விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார். வரும் ஆண்டுகளிலும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் 76-வது குடியரசுத் தின விழா டெல்லியில் நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடமைப் பாதையில் நடைபெற்ற அலங்கார அணிவகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து 400 முன்னணி விவசாயிகள் மற்றும் திட்ட பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.