சென்னை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு அரசு வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்கி வருகிறது. இந்தப் பதக்கம் பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 9,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
அந்த வகையில், இவ்வாண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் க.வெற்றிவேலுக்கு வழங்கினார்.
இந்நிலையில், அண்ணா பதகத்தை பெற்ற தீயணைப்பு வீரர் வெற்றிவேல் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட 5 பேரை மீட்டதற்கு அண்ணா பதகத்திற்கான வீர தீரச் செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடையாறில் பிரபல தனியார் மருத்துவமனை அருகே அடையாற்று வெள்ளத்தில் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் விழுந்து கிடப்பதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 12.11.2024 அன்று மாலை 5.40 மணியளவில் தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: குடியரசு தின விழா: கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்கள்!
உடனடியாக மெரினா மீட்புக்குழுவுடன் அவசரகால மீட்பு ஊர்திடன் சம்பவ இடத்திற்கு சென்றோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆற்றில் உயிருடன் மிதப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் இறங்கி 3 பேரையும் மீட்டோம். அப்போது அவர்களின் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது. நாங்கள் எங்கள் பணியை செய்தோம். இந்த விருது கிடைத்திருப்பது ஊக்கமாக உள்ளது. ஆற்றில் சிக்கியவர்களை மீட்ட போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி எண்ணற்றது. அது தற்போது நான் விருது வாங்கியிருப்பதைவிட மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான நேரம்." என்று வெற்றிவேல் பெருமிதத்துடன் கூறினார்.