புது டெல்லி: நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், நாட்டின் உயர்நிலை ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலர் கண்கவர்ந்த இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடந்த பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளை சேர்ந்த வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
குறிப்பாக இன்று நடந்த குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசு தின நிகழ்ச்சியின்போது நடந்த அணிவகுப்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை காண சுமார் 10,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: பத்ம பூஷன் 2025: கலைத்துறையில் அஜித் குமார்; ஷோபனாவுக்கு விருது அறிவிப்பு - முதலமைச்சர் வாழ்த்து!
அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் டேங்க் T-90 பீஷ்மா, NAG ஏவுகணை, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, பினாகா மல்டி-லாஞ்சர் ராக்கெட் சிஸ்டம், அக்னிபான் மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் ஆயுத அமைப்பு என இந்தியாவின் அனைத்து ராணுவ வலிமைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களோடு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி கடமைப் பாதையில் அஞ்சலி செலுத்துவதற்கு முன்னர் பிரதமர் மோடி பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இந்தியா கேட் வளாகத்தில் உள்ள போர் நினைவு சின்னம் 2019 இல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த நினைவு சின்னமானது, 1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போர் மற்றும் 1947, 1965 மற்றும் 1971 இல் இந்தியா-பாகிஸ்தான் போர்களின்போது கொல்லப்பட்ட வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.