மதுரை: மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்கும் இந்தியாவில் வாழும் இந்து மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மங்கல்ராஜ் சாகு என்ற தொழிலாளி மிதிவண்டியிலேயே பயணம் மேற்கொண்டு நேற்று மதுரை வந்தார். பொதுமக்கள் தேநீர் மற்றும் உணவு வழங்கி உபசரித்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கல்ராஜ் சாஹீவா (55) என்பவர் அங்கு மீன் பாடி வண்டி (டிரை சைக்கிள்) ஓட்டும் தொழிலாளி ஆவார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு செல்வதற்காக தன்னுடைய மிதிவண்டியிலேயே புறப்பட்டு யாத்திரையாக வந்துள்ளார்.
இந்நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் தனது தரிசனத்தை முடித்துக் கொண்ட மங்கல்ராஜ், மீண்டும் சட்டீஸ்கர் செல்லும் வழியில் மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அப்போது ஈடிவி பாரத் ஊடகத்தின் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அப்போது பேசிய மங்கல்ராஜ், "இந்திய தேசத்தில் வாழும் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும், உலக நலன் வேண்டியும் மிதிவண்டி யாத்திரையை, சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள துர்க் மாவட்டம் ராம் மந்திர் ஷிதாலா தலாப் கோட்டையிலிருந்து டிசம்பர் 21 தொடங்கினேன். தற்போது ராமேஸ்வரம், கன்னியாகுமரி யாத்திரையை நிறைவு செய்துவிட்டு இன்று மீனாட்சி அம்மனை தரிசித்துச் செல்ல இன்று மதுரை வந்துள்ளேன்.
இதற்கு முன்பாக ஷீரடி, உஜ்ஜையினி, வைஷ்ணவதேவி, ஜம்மு -காஷ்மீர், கத்ரா, அயோத்தி, வாரணாசி ஆகிய புனித ஸ்தலங்களுக்கு இரண்டு முறை மிதிவண்டி யாத்திரை சென்றுள்ளேன். இது மூன்றாவது யாத்திரையாகும். எனது மிதிவண்டியிலேயே உணவு சமைக்க, ஆங்காங்கே தங்கிக் கொள்ள என அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்துள்ளேன்.
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அன்போடு பழகினார்கள். தற்போதுகூட என்னை யாரென்றே தெரியாத நபர்கள் எனக்கு தேநீரும், பிற்பகல் உணவும் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். உலகத்தின் நலனும் மிக முக்கியம். அதை வலியுறுத்தியே இந்த யாத்திரையை நான் மேற்கொண்டேன்" என்றார் மங்கல்ராஜ் சாஹீவா.