சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் (Chennai Open ATP Challenger) ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன் இரட்டையருக்கான இறுதிப் போட்டியில், ஜப்பான் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், ராமநாதன் - மைனேனி இந்திய ஜோடி தோல்வியடைந்தது.
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 (ATP100) ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025, பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கிய நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டிகள் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா, செக் குடியரசு, கிரேட் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, குரோஷியா, ஜப்பான், ஹாங்காங், கஜகஸ்தான், கனடா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், ஹங்கேரி, பிரான்ஸ், இத்தாலி, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர்.
![பரிசு வென்ற இந்திய மற்றும் ஜப்பான் வீரர்கள் மேடையில் உள்ள காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/tn-che-chennaiopentennisdoublesfinal_08022025203423_0802f_1739027063_819.jpg)
இந்த நிலையில், நேற்று (பிப்.8) இரட்டையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில், ஜப்பானைச் சேர்ந்த ஜோடி ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகி, இந்தியாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியனான ராமநாதன் - மைனேனி ஆகியோர் களமிறங்கினர்.
அப்போது, ராமநாதன் - மைனேனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட, இரட்டையர் சாம்பியன் பட்டத்தை ஜப்பானைச் சேர்ந்த ஜோடி ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகி 6-4, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. அதனால், நடப்பு சாம்பியனான இந்திய ஜோடி ராமநாதன் - மைனேனி (தோல்வி) சாம்பியன் பட்டத்தை இழந்தது.
![போட்டியில் வெற்றி பெற்ற ஜப்பான் வீரர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/tn-che-chennaiopentennisdoublesfinal_08022025203423_0802f_1739027063_807.jpg)
அதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற ஜப்பான் சேர்ந்த ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகி ஜோடிக்கு இந்திய மதிப்பில் ரூ.6,76,600 ($7960) பரிசுக்கான காசோலையும், கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல, இறுதிப் போட்டியில் தோல்வி (இரண்டாம் இடம்) அடைந்த ராமநாதன் - மைனேனி இந்திய ஜோடிக்கு இந்திய மதிப்பில் ரூ.3,91,000 ($4600) பரிசுக்கான காசோலையும், கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (பிப்.9) ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் அணிக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ‘சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்’ - அமைச்சர் மெய்யநாதன்!
போட்டி குறித்து இந்திய வீரர் ராமநாதன் பேசுகையில், "இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நாங்கள் நன்றாக விளையாடினோம், அதேபோல எங்களுடைய போட்டியாக இருந்த ஜப்பானிய வீரர்களும் இவ்வளவு சிறப்பாக விளையாடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
![பரிசு பெற்ற இந்திய வீரர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/tn-che-chennaiopentennisdoublesfinal_08022025203423_0802f_1739027063_503.jpg)
டென்னிஸ் போட்டியைப் பொறுத்தவரையில், போட்டியின் போது அனைத்து புள்ளிகளும் முக்கியமானது தான். ஆனால் ஒரு சில இடத்தில் ஆட்டங்களை நாங்கள் வெற்றி ஆட்டமாக மாற்றத் தவறிவிட்டோம். இனிவரும் காலங்களில் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம்.
நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டியாக இருக்கிறது. யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது. எங்களுக்கும் முதல் மூன்று போட்டியில் கடினமானதாகத் தான் இருந்தது. அதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தோம். தற்போது, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும், அவருடைய முழு உழைப்பையும் செலுத்தித் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.