சென்னை: பள்ளிகளில் மாணவிகளுக்கு அதிகரிக்கும் போக்சோ குற்றங்களை தடுப்பது தொடர்பாக 4 நாட்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பாெதுத்தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை வெளியிட்டார். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மத்தியில் பேசும்போது, "பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் கருத்துக்களை பரப்பி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
மேலும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலேயே பள்ளிகளில் வரும் போக்சோ புகார்களை முன்னுரிமை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அளவில் பிரச்சினைகள் வரும் போதே அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படு வேறு எங்கும் பணியாற்ற முடியாது. ஆசிரியர் திட்டினால் கூட 14417 உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற கூடிய பொதுத் தேர்வை சார்ந்து அனைத்து நிலையில் இருக்கக்கூடிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த முறை எப்படி தேர்வு நடந்தது? அதை சார்ந்த ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா? அது இந்தாண்டு பிரச்சனை வராத அளவிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை 10, 11, 12 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகளின் போது கேள்வி தாள் எப்போது பள்ளிகளுக்கு வர வேண்டும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிட வேண்டும்? உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பொது தேர்வு என்பது பொது தேர்தல் நடந்துவதற்கு சமமானது. இந்தியாவில் பொதுத் தேர்வுகளில் பெருமை வாய்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பொதுத் தேர்வுகளை மாணவர்கள் மகிழச்சியாக எழுத வேண்டும். எந்த பதட்டமும் இல்லாமல் தேர்வுக்கு முதல் நாள் படிக்காமல் முன்பாகவே படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
போக்சோ தொடர்பாகவும் மாணவர்கள் பிரச்சனை குறித்தும் கூட்டத்தில் பேசி உள்ளோம். போக்சோ சம்பந்தமாக மாணவர் மனசு பெட்டி 14417 என் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு யாருக்கும் அச்சம் இல்லாமல் தொடர்ந்து, எங்கெல்லாம் தவறு நடக்கின்றதோ புகார்கள் பெறப்படுகிறது. புகார் வந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், துரிதமாக எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரிவாக பேசியுள்ளோம்.
போக்சோ புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கிறார். மூன்று-நான்கு நாட்களில் வரைவு வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும். இனி புகார்கள் வராத வகையில் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளோம். ஜூன் கல்வி ஆண்டு வரும் பொழுது தன்னார்வலர்கள் மூலமாகவும், காவல்துறை மூலமாகவும், சமூக நலத்துறை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பெரிய விழிப்புணர்வு பணியாக மேற்கொள்ளவுள்ளோம்.
பாலியல் புகார் தொடர்பாக இதுவரை நிலுவையில் 238 வழக்குகள் உள்ளன, 11 பேர் குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். ஏழு பேர் இறந்திருக்கின்றார்கள். மார்ச் 10ம் தேதி 56 பேருக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. எந்தெந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பான உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தமிழ் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ASER அமைப்பு கூறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டு குறித்தான கேள்விக்கு, ஏற்கனவே இது பற்றி ரிப்போர்ட் ஒன்று வந்தது, அப்போது நமது கல்வித் தரத்தை இப்படி சொல்கிறார்களே என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டேன். அதற்கு, பீகார்தான் கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவிப்பார்கள் ஆனால் அங்கு இருக்கும் நிலைமை வேறு என என்னிடம் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் கல்வித் தரம் என்ன என்பது நமக்குத் தெரியும் என தெரிவித்தார்.
தரவுகள் இல்லாமல் அவர் இஷ்டத்திற்கு சொல்லிவிட்டு போகலாம். யார் யாரோ நம்மளை சோதித்து பார்ப்பதை காட்டிலும் நாம் ஏன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பண்ண வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கும் சோதனை செய்து பார்த்து விடலாம் என மாநில திட்டக் குழு மூலம் திட்டமிட்டுள்ளோம். பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்பதைப் மாநிலத் திட்ட குழு தரவுகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.