கோவை: முதலமைச்சருக்கு தான் இன்று டப்பிங் தேவைபடுகின்றது, பாஜகவிற்கு எங்கேயும் டப்பிங் கிடையாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி: கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் டெக்னோ பார்க் வளாகத்தில் நடைபெறும் ரோட்டரி கிளப் மாநாட்டில், பங்கேற்று பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, "அமெரிக்காவில் 100 மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளன. எனவே, அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளனர். அதே போல கடந்தாண்டு இந்திய நிறுவனங்கள் இங்கிலாந்தில் அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளன. கடந்தாண்டு அமெரிக்காவில் உ்ள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.
விமானங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான விதைகளை விதைத்து உள்ளோம். பாகிஸ்தான், சீனா அண்டை நாடாக இருப்பதால், பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளோம். உலக அளவில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்கிறது, செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தை கட்டுபடுத்துபவர்கள்,"என்றார்.
மனிதாபிமான உதவிகள் செய்யப்படும்: இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் விஷயத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 29 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். 7.50 லட்சம் பேர் உரிய ஆவணம் இன்றி இருக்கின்றனர் என அமெரிக்கா சொல்கிறது.
மெக்ஸிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது திருப்பி அனுப்பபட்டு இருக்கின்றனர். அமெரிக்கா சட்டதிட்டங்கள் படி விமானத்தில் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கின்றனர். அமெரிக்காவில் இருத்து திருப்பி அனுப்பபடும் இந்தியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகள் செய்யபடும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய பட்ஜெட்டில் நேரடி நிதி பகிர்வின் மூலம் நிதி வந்து விடுகிறது, இது அனைவருக்கும் தெரியும். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீடு திட்டம் , முத்ரா பயனாளிகள் என ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு இரண்டரை மடங்கு முதல் மூன்று வரை மடங்கு வரை நிதி ஒதுக்குவது அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எதுவும் கொடுக்கவில்லை என முதல்வர் சொல்கிறார் எனத் தெரியவில்லை. இது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பாஜகவுக்காக எடப்பாடி பழனிசாமி டப்பிங் கொடுக்கிறார் என முதல்வர் சொல்லி இருக்கிறார். முதலமைச்சருக்கு தான் இன்றைக்கு டப்பிங் தேவைப்படுகிறது, அவருடைய குரலை போல அறிவாலயத்தில் இருந்து பல பேர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவிற்கு எங்கேயும் டப்பிங் கிடையாது. அதே போல டப்பிங் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் உதயநிதிக்கு தான் தேவைப்படுகிறது. அதிமுகவில் இருந்து பல கட்சித் தலைவர்களை திமுகவில் சேர்க்கின்றனர். திமுகவில் அமைச்சர்கள் பதவி வகிக்கும் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான்,"என்று கூறினார்.