மதுரை: பிளாஸ்டிக் கழிவுகளின் மூலமாக கடல் அரிப்பைத் தடுத்து கடலோரப் பகுதிகளைக் காப்பாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை தியாகராசர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை கண்டறிந்துள்ளதாக பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளாகக் கருதப்படும் பிளாஸ்டிக் பொருள்களை, மறுசுழற்சி செய்து உகந்ததாக எவ்வாறு மாற்றலாம் என்ற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர் முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடல் அரிப்பிலிருந்து கடலோரப் பகுதிகளைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் அதில் விதிவிலக்கல்ல. குறிப்பாக, இந்தியாவில் 1,076 கி.மீ. தூரம், நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட தமிழ்நாடு தற்போது கடல் அரிப்புகளால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, தற்போது திருச்செந்தூரில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கும் விதமாக பாறைகள் கடலோர பகுதிகளில் கொட்டப்பட்டது, தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, முக்கோண வடிவில் காங்கிரீட் பாளங்கள் உருவாக்கப்பட்டு கடலோரம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உறுதியாக இருந்தாலும், இவற்றால் அதிகம் செலவு என்பதும் பெரும் சவாலாக உள்ளது.

சிக்கல்களை எதிர்க்கொள்ளும் மீனவர்கள்:
மேலும், தமிழக மீன்வளத்துறையின் சார்பாக 2024-2025 கொள்கை விளக்கக் குறிப்பில் அளித்துள்ள தகவலின் படி, தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி - கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக ரூ.628.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. மேற்கண்ட கடலோர மாவட்டங்களில் மட்டும் 10.48 லட்சம் மீனவர்கள் கடல் அரிப்பு சார்ந்த பிரச்சனைகளால் பெரிதும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய சாலைகளை மேம்படுத்த ஆண்டிற்கு 600 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேவை; பத்மஸ்ரீ வாசுதேவன் சிறப்பு பேட்டி! |
இந்த நிலையில், கடல் அரிப்பால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கும் வகையில், மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியரும், பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் தலைமையிலான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளின் மூலமாக கடல் அரிப்பை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன், “பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் தொழில் நுட்பம் தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலைகள் அனைத்தும் பிளாஸ்டிக் சாலைகளாக இருக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை தற்போது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கடல் அரிப்பைத் தடுக்கும் தொழில்நுட்பம்:
இதனையடுத்து, இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் நிகழும் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு, குறைந்த செலவில், தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை தற்போது கண்டறிந்துள்ளோம். கடல் அரிப்பைத் தடுக்க இதுவரையில் கிரானைட் கல் (Granite Stone) கடலோரங்களில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு கான்கிரீட் (Concrete) மூலமாக செய்யப்பட்ட 'பிளாக்ஸ்'களை (Blocks) அமைத்து வருகின்றனர். இதற்கு மிகப்பெரிய அளவில் சிமெண்ட் பயன்படுத்தும் நிலை உள்ளதால், செலவும் அதிகமாகும்.
தற்போது இதற்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுகளின் மூலமாக கடலோர அரிப்பினைத் தடுக்கும் 'பிளாக்சஸை' (Blocks) எங்கள் ஆய்வகத்தில் மாதிரியாக உருவாக்கியுள்ளோம். இவை குறைந்தபட்சம் 1 டன் அல்லது அரை டன் வரையில் இருக்கும். காங்கிரீட் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிகளைக் கொண்டு இந்த 'பிளாக்ஸ்'களை உருவாக்கியுள்ளோம்.
கடல் அரிப்பிற்கு தீர்வு:
இதில் காங்கிரீட், செராமிக்ஸ் (Ceramics) ஆகியவற்றின் கழிவுகளோடு 30-40 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகள் சேர்த்துள்ளோம். முழுவதுமாக ஆய்வகப் பணிகள் முடிவடைந்து, சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதையும் பயன்படுத்தி இதுபோன்ற பிளாக்ஸ்களை உருவாக்கினால் கடல் அரிப்பு பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
ஆனால், தேவையான பிளாஸ்டிக் கழிவுகள் நம்மிடம் இல்லை. இதற்காகவே நாங்கள் 'நிறைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்' என வேடிக்கையாக கூறி வருகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாக்ஸ், கடல் அரிப்புக்கான செலவு குறைந்த தீர்வாக அமையும். இது உலக நாடுகள் அனைத்திற்கும் பேருதவியாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.