சென்னை: தமிழ்நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் அதே வகையிலான முக்கியத்துவம் தான், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது எனவும், வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 23வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் (23rd National Para Athletics Championship) நேற்று (பிப்.18) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
இந்த தொடரில் 30 மாநிலங்களைச் சார்ந்த 1,476 வீரர், வீராங்கனை பங்கேற்கின்றனர். பிப்.20 ஆம் வரை நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறும் பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி முருகேசன், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திரியா ஜஹாரியா, பாரா தடகள வீராங்கனை பத்மஶ்ரீ தீபா மாளிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ICC Champions Trophy 2025: தந்தை மரணம்.. போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு பெரும் அடி! வீடு திரும்பிய பயிற்சியாளர்!
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்த விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாட்டில் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த போட்டியை நடத்த 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Happy to have inaugurated the 23rd #NationalParaAthletics Championship in Chennai today. This is the first time Tamil Nadu is hosting the national para championship.
— Udhay (@Udhaystalin) February 18, 2025
Around 1,500 para-athletes from across the country, representing 30 states, will take part in this prestigious… pic.twitter.com/EVRBxT8fNI
கிட்டத்தட்ட 30 மாநிலங்களில் இருந்து திறன் வாய்ந்த 1,500 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். மற்ற விளையாட்டு வீரர்களைப் போல மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் மூலம் 230 வீரர்களுக்கு, ரூ.5 கோடி நிதி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 46 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர். 203 பாரா தடகள வீரர்களுக்கு தமிழக விளையாட்டுத் துறை மூலம், ரூ.26 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்ஸ் தொடரில், நான்கு பேர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். மேலும், விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.