By த.சுபாஷ், செங்கல்பட்டு
செங்கல்பட்டு: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றல் மட்டுமல்லாமல் பொது அறிவு, எழுதுதல், புரிதல் உள்ளிட பல்வேறு வகையான திறன்களை வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மாணவர்களின் படைப்பு மற்றும் கற்பனை திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை தொடங்கியது. அதன்படி, 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' என்கிற இதழும், 6ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' என்கிற இதழும் மாதம் இரு முறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இதழ்களை மதிய உணவு இடைவேளைக்கு பின்பு 1 மணி முதல் 1.20 மணி வரை கிட்டத்தட்ட 20 நிமிடம் மாணவர்கள் அவர்களது அறையில் அமர்ந்து கொண்டு வாசித்து வருகின்றனர்.
அஸ்தினாபுரம் அரசுப் பள்ளி
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் தினந்தோறும் 20 நிமிடம் கதைகளை படித்து வாசிப்புத் திறன்களை மெருகேற்றி வருகின்றனர்.
அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில ஆசிரியர் சித்ரா, கதைகளை நன்றாக வாசித்து இதேபோன்று கதைகளை எழுதினால், உங்கள் கதைகளும் புத்தகமாக வெளியிட்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என ஊக்கமளித்துள்ளார்.

ஆசிரியர் சொல்வதை கேட்டு உற்சாகமான மாணவர்கள் எப்படி கதை எழுதுவது? எதைப் பற்றி எழுதுவது? என்பது தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர் சித்ராவிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். அவர் உங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் நடப்பதையும், நீங்கள் கற்பனை செய்வதையும் கொண்டு அதை கதைகளாக எழுதலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அவர்களின் வாழ்க்கையில் நடப்பதையும், கற்பனையாக நினைப்பதையும் கதையாக எழுதி அதனை ஆசிரியர் சித்ராவிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் கிராமத்து பாசம், நிலா சோறு, நரியும் குயிலும், ஒரு நீண்ட பயணம், இரவின் கனவு, பட்டாம் பூச்சி உள்ளிட்ட 37 கதைகளை மாணவ, மாணவிகள் எழுதி ஒப்படைத்துள்ளனர்.
'ஒரு ஊர்ல'
அதனை படித்து அசந்து போன ஆசிரியர் சித்ரா அதில் உள்ள எழுத்து பிழை திருத்தங்களை சரி செய்து அதனை 'ஒரு ஊர்ல' என்ற தலைப்பில் புத்தகமாக அச்சிட்டு வெளியிடுள்ளார். இதையடுத்து அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேன்சிட்டு இதழிலும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய கதைகள் இடம்பெற்றுள்ளன. இது மாணவ, மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
'மகிழ்ச்சியாக இருந்தது'
இது குறித்து அஸ்தினாபுரம் அரசு பள்ளி மாணவர்களை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தேவஸ்ரீ கூறுகையில், '' தேன் சிட்டு என்ற புத்தகத்தை நாங்கள் மதியம் 1 மணி முதல் 1.20 வரை படிப்போம். அப்போது அதில் கதைகள் நிறைய வரும். எங்கள் கதைகளும் இந்த புத்தகத்தில் வந்தால் நல்லா இருக்கும் என ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். அப்போது ஆசிரியர் சித்ரா, நீங்களும் நன்றாக வாசித்து கதை எழுதிக் கொடுத்தால் அதை புத்தகமாக வெளியிடலாம் என எங்களுக்கு ஊக்குமளித்தார். அதன்படி, நாங்கள் 19 பேர் ஒன்றிணைந்து கதைகளை எழுதிக் கொடுத்தோம். அதனை ஆசிரியர் சித்ரா திருத்தம் செய்து புத்தகமாக வெளியிட்டார். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

'யானையின் ஆணவத்தை குறைத்த எறும்பு'
நான் இதில் 'யானை' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன். அதில், காட்டில் வாழும் யானை தன் உருவத்தை வைத்து ஆணவத்துடன் இருக்கும். அதனுடன் எறும்பு போட்டி போட்டு யானையின் ஆணவத்தை குறைக்க வேண்டும் என எறும்பு நினைக்கும். அவ்வாறு போட்டியிட்டு யானையின் ஆணவத்தை எறும்பு குறைக்கும். இதை அடிப்படையாக கொண்டு ஒரு கதையை எழுதினேன். இந்த கதை 'ஒரு ஊர்ல' என்ற புத்தகத்தில் இடம் பெற்றது மட்டுமில்லாமல், தேன் சிட்டு புத்தகத்திலும் இடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
'சித்ரா டீச்சருக்கு நன்றி'
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அபிஸ்ரீ கூறுகையில், '' நான் 'பூனை' என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதினேன். எனக்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும். ஆசிரியர் உங்களுக்கு பிடித்தது, உங்கள் கற்பனை அனைத்தையும் கதையாக எழுதலாம் எனக்கு கூறியதால் நான் பூனை கதையை தேர்ந்தெடுத்து எழுதினேன். நாங்கள் எழுதிய கதைகள் தேன் சிட்டு புத்தகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கதை எழுத உறுதுணையாக இருந்த சித்ரா டீச்சர் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் நன்றி'' எனக் கூறினார்.
துணை முதலமைச்சர் பாராட்டு
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகிலன் கூறுகையில், '' தினந்தோறும் பள்ளியில் தேன்சிட்டு புத்தகத்தில் வரும் கதைகளை படித்து வந்தோம். அதன் மூலம் ஆர்வம் உண்டாகி நாங்களும் கதை எழுத தொடங்கினோம். நாங்கள் 19 பேர் இணைந்து 37 கதைகளை எழுதி அதை 'ஒரு ஊர்ல' என்ற புத்தகமாக வெளியிட்டு உள்ளோம். நாங்கள் எழுதி வெளியிட்ட புத்தகத்தை படித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்த்துவிட்டு எங்களை பாராட்டினர். மேலும், தொடர்ந்து நாங்கள் கதைகளை எழுதி வருகிறோம். அதனை சமூக வலைதள பக்கங்களிலும் ஆசிரியர்கள் பகிர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது பெற்றோர்களுக்கும் பெருமையாக உள்ளது'' என்றார்.

பள்ளி ஆசிரியர் சித்ரா
அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சித்ரா கூறுகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் திரைப்படம் மன்றம், பேரிடர்கள் பற்றிய மன்றம், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், வினாடி வினாக்கள் போன்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவு திறன் வளர்க்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கும்பகோணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எழுதிய கதைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதனை பார்த்த பிறகு நமது பள்ளி மாணவ, மாணவிகளும் இதுபோன்ற கதைகளை எழுதி வைக்க வேண்டும் என தோன்றியது. அதன் அடிப்படையில் அந்த பள்ளியின் ஆசிரியரை தொடர்பு கொண்டு, கதை எழுதிய மாணவ, மாணவிகளை விடுமுறை நாட்களில் எங்கள் பள்ளிக்கு அழைத்து வந்து இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்குமாறு கேட்டோம். அதன் பெயரில் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தனர்.

தேன் சிட்டு புத்தகத்தில் வரும் படங்கள் கதைகளை காண்பித்து, உங்கள் கற்பனையை கதையாக எழுதலாம் என்றும், தினமும் உங்கள் வாழ்க்கையில் நடப்பதையும் ஒரு கதையாக எழுதலாம் என அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதன் பிறகு எங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஒரு மொழியில் தவறில்லாமல் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களை தொடர்ந்து கதை எழுத வைத்தோம். அதன் பிறகு 37 கதைகளை 19 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து எழுதினர். அதனை 'ஒரு ஊர்ல' என்ற புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டோம். இது குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அவர்களுக்கு அமைந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய கதைகளை புத்தகமாக வெளியிட்டதை பார்த்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் எங்களை வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், தமிழ் கதைகளை மொழி பெயர்த்து ஆங்கில மொழியிலும் மாணவ, மாணவிகள் கதை எழுதியுள்ளனர். அதனை விரைவில் புத்தகமாக வெளியிட உள்ளோம். இதற்கு உறுதுணையாக உள்ள அனைத்து ஆசிரியர், மாணவ, மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆசிரியர் சித்ரா கூறினார்.