ஈரோடு: இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பவானிசாகரில் அமைந்துள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்திற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று (பிப்.21) வருகை தந்தார். தொடர்ந்து, அங்குள்ள பயிற்சி நிலையத்தில் உள்ள வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம், விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் அரசு அலுவலர்களிடையே கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது, “ தமிழ்நாடு அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் என ஒவ்வொரு பணியாளர்களும், சுமார் 43 நாட்கள் அடிப்படை பயிற்சியினை பெற வேண்டும். இதற்காக 1974 ஆம் ஆண்டு பவானிசாகர் அரசு பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் 198 அரசுத்துறையைச் சேர்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 184 பேருக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 66 வது அடிப்படை பயிற்சி வகுப்பில், 80 கணினி மூலம் புதிய தொழில்நுட்படத்துடன் டிஜிட்டல் வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், ஐஏஎஸ் தேர்ச்சியை அதிகரிப்பதற்கு நான் முதல்வர் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளித்து வருகிறோம்.
இந்த ஆண்டு 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முதலமைச்சர் திட்டமிட்டதில், தற்போது வரை 60 ஆயிரம் பேருக்கு டிஎன்பிஎஸ், எம்ஆர்பி மூலமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. தொடர்ந்து, பவானிசாகர் அரசு பயிற்சி நிலையத்தை ஆய்வு செய்து தேவையான திட்ட பணிகளை நிறைவேற்றுவோம்” என இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.