சென்னை: சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், சரக்குகள் வருகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு வசதி கருதி 7 நவீன தீயணைப்பு வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சில தீயணைப்பு வாகனங்கள் பழுதாகிய நிலையில், புதிதாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு, நேற்று (பிப்.18) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தில், ஒரே நேரத்தில் 10,000 லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
மேலும், 1,300 லிட்டர் ஃபோர்ம் நுரைகளையும் சேமித்து வைக்க முடியும். அதுமட்டுமின்றி, 30 செகண்டில்
80 கிலோ மீட்டர் வேகத்தில் மிக உயரமான கட்டடங்களிலும் தண்ணீரை பீச்சி அடித்து, எவ்வளவு பெரிய தீயாக இருந்தாலும் உடனடியாக கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நவீன தீயணைப்பு வாகனம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சேர்ந்து தற்போது ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி உள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்தில் மருத்துவ வசதிக்காக அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே 2 மட்டுமே இருந்தன. தற்போது 4 நவீன ஆம்புலன்ஸ்கள் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஆம்புலன்ஸில் அனைத்து விதமான நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ - திட்ட அறிக்கை தாக்கல்!
இந்த ஆம்புலன்ஸில் ஒரே நேரத்தில் நான்கு நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இந்த ஆம்புலன்ஸ் முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் கூடியது. அதேபோல் புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை சேர்த்து மொத்தம் ஆறு ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

எனவே, சென்னை விமான நிலையத்தில் இனிமேல் திடீரென பாதிப்பு ஏற்பட்டாலும், அனைத்து தரப்பிலும் விமான நிலைய ஊழியர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என விமான நிலைய தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் உள்பட 4 புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை நேற்று (பிப்.18) சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.