ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளும் பெரிய பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன். தமிழை விட தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, ராம் சரண் உட்பட இன்னும் பல கதாநாயகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலையா என்றழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா, தமனுக்கு விலையுர்ந்த போர்ஷே (Porsche) எனும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கரந்திக்கு வெளியான ’டாகு மஹாராஜ்’ திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் ’அகண்டா’, ’வீர சிம்ஹா ரெட்டி’, ’பகவந்த் கேசரி’ என தொடர்ச்சியாக பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன். இந்த கூட்டணியை ரசிகர்களும் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ’அகண்டா’ திரைப்படத்தின் பிஜிஎம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
A bond beyond cinema! ❤️❤️#NandamuriBalakrishna surprises the sensational @MusicThaman with a grand Porsche as a token of appreciation! 😍💯
— Ramesh Bala (@rameshlaus) February 15, 2025
Their bond keeps growing showing that respect and admiration go beyond movies 🫶🏻#NBK #Thaman pic.twitter.com/ySxNNsGPsJ
இதையடுத்து இரண்டாம் பாகமாக உருவாகும் ’அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ’டாகு மஹராஜ்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தமனை பாராட்டி இந்த பரிசை வழங்கியுள்ளதாக பாலகிருஷ்ணா தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலையுயர்ந்த சொகுசு காரை பரிசளித்தபின் தமனுடன் செய்தியாளர்களிடம் பேசிய பாலையா தமன் குறித்து, ”இரண்டு தலைமுறைகளாக இசையமைப்பாளர்களைப் பார்த்து வருகிறேன். என் தம்பி தமன் ஒரு நல்ல இசையமைப்பாளர். இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு” என உணர்வுப்பூர்வமாக பேசினார். தமனும் பாலையா குறித்து பல்வேறு இடங்களில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தனது அம்மாவுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ”ஐந்து வருட உழைப்புக்கு குழந்தை மூலம் கிடைத்த மரியாதை... ’பேபி அண்ட் பேபி’ குழந்தை நட்சத்திரத்தின் தந்தை பெருமிதம்!
தமன் தற்போது ’அகண்டா 2’ படம் மட்டுமிலாமல் தெலுங்கில் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’, பவன் கல்யாணின் ‘ஓஜி’, தமிழில் ஆதி நடிக்கும் ’சப்தம்’, அதர்வாவின் ’இதயம் முரளி’, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஜேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ஆகியவற்றிற்கு இசையமைக்கிறார். மேலும் இந்தியிலும் ஒரு படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தமன் பின்பு முழுநேரமாக இசையமைப்பாளராக மாறிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது தமிழில் அதர்வாவின் ’இதயம் முரளி ’திரைப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார்.