மும்பை: இங்கிலாந்து எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்களை குவித்தது. 37 பந்துகளில் சதம் விளாசிய இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா வெறும் 54 பந்துகளை 135 ரன்களை குவித்தார். சிவம் துபே 30 ரன்கள், திலக் வர்மா 24 ரன்களும் தன் பங்கிற்கு அடித்தனர்.
248 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டகாரரான பில் சால்ட் மட்டும் 23 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். ஆனால், பிற பேட்ஸ்மேன்கள் யாருக்கு சொல்லிக் கொள்ளும்படி ரன்களை அடிக்காமல், வந்த வேகத்தில் நடையை கட்டியதால், வெறும் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 97 ரன்களில் சுருண்டது. இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், சிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட்டது.