சென்னை: மக்கள் ஆய்வு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அந்த அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம் இன்று (பிப்ரவரி 02) வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஜனவரி 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 118 இடங்களில் 1,470 வாக்காளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. 7 வகைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வின்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு முன்னிலையில் உள்ளது. திமுக 59.5 சதவீதம், நாம் தமிழர் கட்சி 16.7 சதவீதம், பிற வேட்பாளர்கள் 1 சதவீதம், நோட்டா 2.3 சதவீதம் ஆதரவு என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்களிக்க விருப்பமில்லை என்று 17.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன்படி, வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: "நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்" - மு.க.ஸ்டாலின்!
மேலும், பெரியார் குறித்து ஊடகங்களில் பரவலாக நடைப்பெறும் விமர்சன மோதல்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று எங்களது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது." என்று ராஜநாயகம் தெரிவித்தார்.