சென்னை: ஈசிஆர் பகுதியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது தொடர்பாக பெண் ஒருவர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கானத்தூர் போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கானத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, வரும் 14ஆம் தேதி வரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த சந்துரு என்பவரை நேற்று (பிப்ரவரி 01) காலை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ கடந்த ஜனவரி 25ஆம் தேதி சென்னை ஈசிஆர் ரோட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 பேர் கண்டறியப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈசிஆர் கார் விவகாரம்: கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது!
முன்னதாக, 4 பேர் கைது செய்த நிலையில், தற்போது சந்துரு என்ற நபரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சந்துரு மீது ஏற்கனவே ஜேஜேநகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கடத்தல் வழக்கு மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. சந்துருவின் நெருங்கிய நண்பர் சந்தோஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் கார்களை விலைக்கு வாங்கி விற்பது, கைமாற்றுவது போன்ற வேலையை செய்து வந்துள்ளார்.
காரில் கட்சிக் கொடியை பயன்படுத்தியது ஏன்?
இவர் கூறியதன் பேரில், சுங்க சோதனையில் கட்டணம் செலுத்தாமல் தவிர்க்க சந்துரு காரில் கட்சிக் கொடியை கட்டியுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், சந்துருக்கு நிரந்தரமாக வேலை இல்லை. இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது தான் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காரில் சென்றவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள்?
அதனைத்தொடர்ந்து, சந்துருவின் உறவினர்கள் திமுக, அதிமுக கட்சியில் இருப்பதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ இந்த வழக்குக்கு இது தொடர்பான தகவல்கள் தேவைபடவில்லை. தேவைப்பட்டால் புலன் விசாரணையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்கள் கட்சியில் இருப்பது உண்மை” என்று தெரிவித்துள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கார் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் வாகனம் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ தேவைப்பட்டால் அது குறித்து விசாரனை செய்யப்படும்” என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சந்துரு அனிஷ் என்ற நபரிடம் இருந்து வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். வாகனத்தை சந்துரு அனிஷிடம் திருப்பிக் கொடுக்காததால் சந்துருவை அனிஷ் தேடி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்கள் சென்ற காரை பிந்தொடர்ந்தது தொடர்பான கேள்விக்கு, “புலன் விசாரணையில்தான் உண்மை தன்மை தெரியவரும். நேர்மையான விசாரணை செய்து வருகிறோம்” என்று பதில் அளித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, “காரை உரசியதால் தான் சண்டை ஏற்பட்டது. போலீசார் தவறான தகவல்களை வெளியிடுகின்றனர்” என தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். அதில் அனைத்தும் தெரியவரும்.மேலும், கைது செய்யப்பட்ட சந்துருவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.