திருச்சிராப்பள்ளி: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாட்டை உலுக்கியது. இதன் தாக்கம் தணிவதற்குள், திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள 20-ஆவது வார்டு வடக்குத் தையக்காரத் தெருவில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பிப்ரவரி 5 அன்று பரபரப்பான சூழல் நிலவியது.
உடனடியாக இதை சோதனை செய்துபார்த்த மாநகராட்சி நிர்வாகிகள், தொட்டியை சுத்தம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். தொட்டியில் கிடந்தது மனிதக் கழிவுகள் இல்லை எனவும், அது உணவுக் கழிவுகள் என்றும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாசிலாமணி, தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்முறை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
உண்மை நிலவரம் இதுதான்
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திருச்சி மாநகராட்சி வார்டு 20 தையல்கார தெரு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்த பகுதியில் வசிக்கக் கூடிய யாரோ ஒரு நபர் உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு சென்றுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
மாநகராட்சி விளக்கம்
மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, “திருச்சி மாநகராட்சி 2வது வார்டில் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணற்றுடன்கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. 05.02.2025 அன்று இந்தத் தொட்டியின் மேல் பகுதியில் மனித கழிவுகள் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேலூர்: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: சிசுவின் இதயதுடிப்பு நின்றதாக அதிர்ச்சி தகவல்! |
அங்கு நேரில் ஆய்வு செய்தபோது தொட்டியின் மேல் பகுதியை மூடும் ஆர்.சி.சி.சிலாப் மீது உணவு பொட்டலம் வீசப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தொட்டி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டியின் மீது காணப்பட்டது மனிதக் கழிவு அல்ல," என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
வார்டு கவுன்சிலர் பேட்டி
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சங்கர் செய்தியாளரிடம் கூறுகையில், “நீர்த்தேக்கத் தொட்டி குடிநீருக்காக பயன்படுத்துவதில்லை. மக்கள் புழங்குவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவது. அங்கு மனிதக் கழிவு எதுவும் இல்லை. பழைய சாம்பார் குருமாவை யாரோ வீசி சென்று உள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் போட்டு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து சென்றனர். அந்தப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினர் குறிப்பாக சோமு என்பவர் இதுபோன்ற தவறான தகவலை பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
திருச்சியில் நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு வீசப்பட்டதாகப் பொய் செய்தி@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/3DDzkXoYyE
— TN Fact Check (@tn_factcheck) February 7, 2025
கழிவு கலக்கப்பட்ட விவகாரம்
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பிப்ரவரி 5-ஆம் தேதி, தண்ணீர் தொட்டி மீது ஏறிய அடையாளம் தெரியாத நபர்கள் ஏதோ பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
இதை கவனித்த மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்துவிட்டு, பாலித்தின் பையில் மிதந்தது மனித மலம் போன்று இருந்ததாகக் கூற, அது காட்டுத்தீ போல ஊர் முழுக்க பரவி பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், அது மனிதக்கழிவு அல்ல என மாநகராட்சி உறுதிபடுத்தியது. மேலும், மாவட்ட ஆட்சியர் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.