வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவநாதபுரம் மலையில் உள்ள சிவன் கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி, அதனை உடைக்க முயன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பிரவீன்குமார் சார்பிவ் அளிக்கப்பட்ட மனுவில், 'வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவனாதபுரம் மலையில் பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் சுமார் 1500 வருடங்களாக உள்ளன. வெளியூரில் இருந்து பக்தர் வந்து இங்கு வழிபடுவது வழக்கம்.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மலையின் கீழ் உள்ள பக்தர்கள் வழிபாடு செய்ய சென்றுள்ளனர். அப்போது மலையில் சில சமூக விரோதிகள் கூடாரம் அமைத்து இரண்டு நாட்களாக கோயிலை உடைத்து கொண்டிருந்துள்ளனர்.
அதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை பிடித்து விசாரித்தபோது புதையல் எடுக்க வந்ததாக கூறியுள்ளனர். அங்கு 8 நபர்களுக்கு மேல் இருந்துள்ளனர். பல ஆயுதங்களுடன் அங்கு சென்ற பக்தர்களை மிரட்டியும் ஆயுதங்களை காட்டியும் தாக்க வந்துள்ளனர்.இதனால் அவர்கள் பயந்து ஓடி தப்பித்து வந்துள்ளனர்.
அப்போது அக்கும்பலை சேர்ந்த ஒருவரின் ஆதார் கார்டு (ஆதார் எண்:4347 3614 5897) மட்டும் பக்தர்களிடம் சிக்கியுள்ளது.(அதன் நகலை இணைத்துள்ளேன்)
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோயில் மயான பூஜை: "மாசாணி தாயே" என பக்தர்கள் கோஷம்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள புராதன கோயில்களில் புதையல் இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு சேதம் விளைக்கும் சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரவீன்குமார், ஈடிவி பாரத் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண் தெரியாததால், ஊர் மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனவே தான் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளிடமே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 5000 அடி உயரம் உள்ள மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதையல் உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருவது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சமீபத்தில் எழுந்த நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் உல்ள புராதன மலையான சிவநாதபுரம் மலையை மையமாக கொண்டு பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.