ஹைதராபாத்: காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வுகள் இன்று தொடங்கி (பிப்.15) பிப்ரவரி 24 ஆம் தேதி வரை காசி மாநகரில் நடைபெறவுள்ளன. இதில் தமிழகத்தில் சுமார் 1,200 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டுக்கும் காசி மாநகருக்கும் இடையேயான பண்டைய நாகரிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் காசி தமிழ் சங்கமம் எனும் பெருமைமிகு கலாசார நிகழ்வை நடத்தி வருகிறது.
பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வு, இன்று (பிப்.15) தொடங்கி பிப்ரவரி 24 ஆம் தேதி வரை காசியில் நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், தொழில்முனைவோர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த சுமார் 1,000 பேர் இந்த சிறப்பான நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 200 மாணவர்களும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும்,காசிக்கும் இடையேயான கலாசார ரீதியான தொடர்புகள் குறித்து அறியும் வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளனர்.
அத்துடன் இம்முறை அவர்கள், பிரக்யாராஜ் நகரில் நடைபெறும் மகாகும்பமேளாவில் பங்கேற்கும் வாய்ப்பையும், அயோத்தி ராமரை தரிசிக்கும் பேற்றையும் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய அம்சமாக, அகத்திய மாமுனிவர் நினைவுகூரப்பட உள்ளார். சித்த மருத்துவத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் தமிழ் இலக்கியம், நாட்டின் கலாசார ஒருமைப்பாட்டுக்கும் அவர் செய்த பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு செய்யப்பட உள்ளது.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.